அரசு ஊழியர்களின் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது: நீதிபதி கிருபாகரன் சரமாரி கேள்வி

ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது என கேட்ட நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக, 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்

அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பியுள்ள சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக இரண்டு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

தஞ்சை மாவட்டம், பந்தநல்லூரில் அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், தமிழக அரசிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆசிரியரின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி கிருபாகரன், அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் பெற்றோர்கள் ஏன் தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள் என்றும், அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை ஏன் தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார்.

கால தாமதமாக பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்று கேட்ட நீதிபதி, கல்வியில் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி சமமாக இருக்காது என்றும், ஆசிரியர்கள் தங்கள் கடமைகளை செய்யாவிடில் மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்றும் தெரிவித்தார். மேலும், கிராமம் மற்றும் மலைப்பகுதிகளில் ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளனர் என்றும் வேதனை தெரிவித்தார்.

2012-ஆம் ஆண்டுக்குப் பின், எத்தனை அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது என்று கேள்வி எழுப்பிய கிருபாகரன், தமிழ் வழி ஆசிரியர்களே ஆங்கில வழியிலும் வகுப்புகளை எடுப்பதால் எந்த பலனும் இல்லை என தெரிவித்தார். மேலும், ஆங்கில வழி வகுப்புகளை நடத்த பிரத்யேக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனரா என கேள்வி எழுப்பினார். 2012 முதல் எத்தனை மாணவர்கள் ஆங்கில வழிக் கல்வியில் படிக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும், ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடை விதிக்கக் கூடாது என கேட்ட நீதிபதி கிருபாகரன், இதுதொடர்பாக, 2 வாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஜூலை 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

×Close
×Close