அதிமுகவில் எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற பிரச்னை முடிவுக்கு வந்துவிட்டாலும் துணை தலைவர் யார் என்ற கேள்வியும் விவாதமும் இன்னும் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது. சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவியை ஏற்பாரா? என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவராக பதவியேற்ற பின், இன்று (ஜூன் 4) சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்டத்தின் அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். பழனிசாமி இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் கலந்துகொண்டனர். ஆனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் கலந்துகொள்ளவில்லை.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வியை தழுவினாலும் வலுவான எதிர்க்கட்சியாக இடம்பிடித்துள்ளது. அதிமுகவில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக தோல்வியடைந்ததைத் தொடர்ந்த, ஓ.பி.எஸ் போட்டியை ஏற்படுத்தினாலும் கட்சி நிர்வாகிகளின் ஆதரவுடன் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டு பதவியேற்றார். ஆனால், அதிமுகவில் இன்னும் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர், சட்டமன்ற கொறடா தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இந்த சூழலில், அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக லெட்டர் பேடில் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தனியாக கட்சி சார்பில் அறிக்கைகளை விடுத்து வருகிறார். அதே போல, எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தனியாக அறிக்கை வெளியிட்டுவருகிறார்கள். அதே போல, இருவரும் பிரதமருக்கு தனியாக கடிதங்களும் எழுதி வருகின்றனர். அதிமுகவில் நிலவும் இந்த போக்கு ஓ.பி.எஸ் – ஈ.பி.எஸ் இடையே இணக்கம் இல்லாத சூழல் நிலவுவாதாக பேசப்பட்டது. எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்றால், அதிமுக ஒருங்கிணைப்பாளராக கட்சி முடிவுகள் கட்சி சார்பில் வெளியாகும் அறிக்கைகளை தனக்கு அதிகாரம் வேண்டும் என்று வலியுறுத்துவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், ஓ.பி.எஸ் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியை ஏற்க மறுப்பதாகவும் கட்சியில் தனக்கு தலைமை அதிகாரத்தை வழங்க வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ஓ.பி.எஸ் எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியை ஏற்காவிட்டால், சட்டமன்ற முறைப்படி முதல் வரிசையில் அமர முடியாத நிலை வரலாம் என்றும் சட்டமன்ற நடைமுறைகளைப் பற்றி விவாதிக்கும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். அதிமுகவில் சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் இன்னும் தேர்ந்தெடுக்கப்படாமல் உள்ளது.
இந்த சூழலில்தான், எடப்பாடி பழனிசாமி இன்று சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் ஏன் பங்கேற்கவில்லை என்று கேள்விகள் எழுந்துள்ளன. ஓ.பன்னீர்செல்வம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தால், இரண்டாம் கட்ட தலைவர்கள் அவரிடம் அதிமுக சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பதவியை ஏற்றுகொள்ள வேண்டும் என்று பேசியிருப்பார்கள். அதனைத் தவிர்க்கவே அவர் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஆலோசனைக் கூட்டம் முடிந்த பின் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமியிடம், இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்காதது ஏன் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி “அவருடைய வீடு கிரகப்பிரவேசம். பால் காய்ச்சிக்கொண்டிருக்கிறார். இன்றைக்கு நல்ல நாள் என்று நான் வந்திருக்கிறேன். எங்களுக்குள் கருத்து வேறுபாடு ஒன்றும் இல்லை. பக்கத்தில் இருப்பவர்கள் வந்திருக்கிறார்கள். வேறு எந்த நிர்வாகிகளும் வரவில்லை. இன்றைக்கு நல்ல நாள் அதனால், முதன் முதலில் தலைமை அலுவலகத்துக்கு வந்துவிட்டு போகலாம் என்று வந்திருக்கிறேன்.” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“