அதிமுக தலைவர்கள் தங்களுடைய கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடித்து வருகிறது என்று கருதிய நிலையில், புதிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. பாமகவின் இந்த திடீர் அறிவிப்பு, அதிமுக தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இனிமேல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று கூறி, திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளையும் கடுமையாக விமர்சித்தார். 2016 சட்டமன்றத் தேர்தலில் பாமக தனித்து போட்டியிட்டது. பாமகவின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தியது. ஆனால், அந்த தேர்தலில் பாமக கனிசமான அளவில் வாக்குகளைப் பெற்றாலும் ஒரு இடத்தில்கூட வெற்றி பெற முடியாமல் தோல்வியைத் தழுவியது.
இதையடுத்து, பாமக தனது நிலைப்பாட்டை மாற்றிகொண்டு, 2019ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்தித்தது. பாமக போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியைத் தழுவியது. இருப்பினும், தேர்தல் ஒப்பந்தப்படி, அதிமுக அன்புமணிக்கு ராஜ்ய சபா எம்.பி பதவியை அளித்தது.
2020ல் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில், திமுக, அதிமுகவைவிட கூடுதலான இடங்களில் வெற்றி பெற்றது. பாமக தொடர்ந்து அதிமுக கூட்டணியில் நீடித்தது. புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முழுமை அடையாததால், உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.
இதையடுத்து, நடந்து முடிந்த 2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமக தொடர்ந்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது. அதில், பாமக 5 இடங்களில் வெற்றி பெற்றது. அதிமுக தோல்வியத் தழுவியது.
தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக, பாமக முன்வைத்த வன்னியர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு கோரிக்கையை பரிசீலித்த அதிமுக மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு அளித்து சட்டத்தை நிறைவேற்றியது. இதனால், அதிமுகவுக்கும் பாமகவுக்கும் இடையேயான கூட்டணி வலுவாகவே இருந்தது. அதிமுக வன்னியர்களின் வாக்குகளை கவர்ந்துவிட்டதாக தமிழக அரசியல் களத்தில் பார்க்கப்பட்டது.
தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானார். அதிமுகவும் பாஜகவும் மாநிலத்தில் ஆளும் திமுக மீது தொடர்ந்து விமர்சனம் வைத்து வந்தாலும் பாமக அந்த அளவுக்கு எந்த விமர்சனங்களையும் வைக்கவில்லை.
அதிமுக அரசு நிறைவேற்றிய 10.5% இடஒதுக்கீடு சட்டத்தை திமுக அரசு அரசாணையாக வெளியிட்டது. மேலும், அதை எதிர்த்து உயர் நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசு தரப்பு வன்னியர்களின் 10.5% இடஒதுக்கீடுக்கு ஆதரவாக வாதிட்டு வருகிறது.
அதுமட்டுமில்லாமல், 1987ல் வன்னியர் சங்கம் நடத்திய போராட்டத்தின்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 21 பேருக்கு விழுப்புரத்தில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து மு.க.ஸ்டாலின் வன்னியர்களின் ஆதரவை உறுதி செய்தார். இதை பாமக வரவேற்றது.
இந்த சூழலில்தான், புதியதாக உருவாக்கப்பட்ட செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசியில் உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6, 9 தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியது. இந்த சூழலில்தான், பாமக தலைவர் ஜி.கே.மணி 9 மாவட்டங்களில் நடைபெறு ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்தார். பாமக தங்கள் கூட்டணியில் இருப்பதாக கருதி வந்த நிலையில், பாமக உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது அதிமுக தலைவர்கள் இடையே அதிருப்தையை ஏற்படுத்தியுள்ளது.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “இது அவர்கள் கட்சி எடுத்த முடிவு, எனவே, இழப்பைப் பொறுத்தவரை அவர்களுக்குதான். எங்களுக்கு அதனால், எந்தவித இழப்பும் கிடையாது. முடிவெடுப்பதற்கு அவர்களுக்கு அதிகாரம் உண்டு. எங்களுடைய கூட்டணியில் நீடிப்பதா இல்லையா என்பது அவர்களின் முடிவு. அதனால், அவர்கள் முடிவெடுத்துக்கொள்ளட்டும். அதற்காக, எங்களுடைய கட்சியை விமர்சனம் செய்வது, எந்தவிதத்திலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே விமர்சனம் செய்கின்ற சூழ்நிலை தொடர்ந்தால், நாங்களும் விமர்சனம் செய்ய வேண்டிய ஒரு நிலைமை இருக்கும். யாருடைய கட்டாயத்தின் பேரில் இந்த முடிவெடுத்தார்கள் என்பது எங்களுக்கு தெரியாது. ஆனால், எழுதப்படாத ஒப்பந்தம் போல, அவர்களோடு சேர்ந்து இந்த முடிவெடுத்திருக்கலாம். நான், அதைப்பற்றி விமர்ச்சிக்கவில்லை” என்று கூறினார்.
அதிமுக கூட்டணியில் இருந்து பாமக விலகியது குறித்து அக்கட்சியின் வழக்கறிஞர், பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: “அதிமுகவோடு முரண்பாடு ஏற்பட்டதைப் போன்று ஒருவகை தோற்றம் உருவாகியிருக்கிறது. அது உண்மை அல்ல. எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த கருத்துவேறுபாடும் இல்லை. அவர்களோடு நட்போடு இணக்கத்தோடுதான் இருந்துகொண்டிருக்கிறோம். அதிமுக மீதோ, அதிமுக அரசின் மீதோ, எந்தவிதமான விமர்சனங்களையும் தெரிவிக்கவில்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த கூட்டணியைப் பொறுத்தவரையில் தேர்தலைப் பொறுத்தவரையில், போதிய கால அவகாசம் இல்லை என்பதாலும் பெரும்பான்மையானவர்களுக்கு போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என்ற காரணத்தினாலும் இந்த முடிவை பாட்டாளி மக்கள் கட்சி மேற்கொண்டிருக்கிறது. பாமக தொடர்ந்து என்.டி.ஏ கூட்டணியில்தான் தொடர்ந்து இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இன்றைக்கும் இருந்துகொண்டு இருக்கிறோம். அதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.” என்று கூறினார்.
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாமக தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களிடம் பேசியதாவது: “கூட்டணியில் யார் போகிறார்கள், யார் வருகிறார்கள் என்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அதிமுக கூட்டணியைப் பற்றி நம்புவதில்லை. அதிமுக ஒன்றே ஒன்றை நம்புகிறது. அது ஒன்றரை கோடி தொண்டர்களை மட்டும் நம்புகிறது. கூட்டணி என்பது தோளில் போட்டுக்கொள்கிற துண்டு மாதிரி. தேவையாக இருந்தால் போட்டுக்கொள்கிறோம். இல்லை என்றால் இல்லை. பாமக போய்விட்டதே என்று நாங்கள் வருத்தப்படவில்லை. அதனால், கூட்டணியில் இருந்து போகிறவர்களைப் பற்றி கவலை இல்லை. நாங்கள் மக்கள் மத்தியில்தான் கூட்டணி வைத்திருக்கிறோம்.” என்று கூறினார்.
இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பெங்களூரு புகழேந்தி, பாமக தனித்து போட்டியிடும் என்று அறிவித்திருப்பது குறித்து வெளியிட்டுள்ள வீடியோவில், “நான் அன்புமணி ராமதாஸ் சொன்னதற்கு பதில் சொன்னேன். எங்கள் கூட்டணி இல்லை என்றால் அதிமுக 20 இடம்கூட வந்திருக்காது என்று சொன்னார். ஓ.பன்னீர்செல்வம் எங்களுக்கு பொருட்டே இல்லை என்று கூறினார். அவரால் தெற்கில் ஒண்ணும் செய்ய முடியவில்லை. செல்வாக்கு இல்லை என்று விமர்சனம் செய்தார். இதற்குதான் நான் பதில் சொன்னேன். அதன் பிறகு, என்ன காரணம் என்று தெரியாமல் நான் நீக்கப்பட்டு நீதிமன்றம் வரை சென்று நிற்கிறேன். என்னை கட்சியில் இருந்து நீக்கியதாக அறிவிப்பு வந்தது. ஆனால், இன்றைக்கு என்ன நடந்துள்ளது. இன்றைக்கு பாமக ஊரக உள்ளாட்சி தேர்தலில் அதிமுக கூட்டணி தேவையில்லை என்று முடிவெடுத்து ராமதாஸ் அறிவித்துள்ளார். ஏனென்றால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, இத்தனை இடங்களும் எங்க பெல்ட் (வன்னியர்) என்று உரிமை கொண்டாடுகிறார்கள். திருநெல்வேலியும் தென்காசியும் அவர்களுக்கு வராது. ஆகவே இத்தனை இடங்களுக்கு சொந்தக்காரர்கள் நாங்கள் என்று யோசித்து நாங்கள் உங்களோடு வரவில்லை என்கிறார்கள். எவ்வளவோ சொன்னாலும் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து பதில் வரவில்லை. முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியை அனுப்பி இதை சரி செய்துவிட்டு வாங்க என்று கூறுவார்.
மனுத்தாக்கல் செய்கிற நேரத்தில், பாமக கூட்டணி இல்லை என்று அறிவிக்கிறது. ஒரு வளர்ந்த கட்சி பதில் சொல்லக்கூட யோக்கியதை இல்லை.” என்று கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
இதனிடையே பாமகவின் இணையவழி கூட்டத்தில் பேசிய டாக்டர் ராமதாஸ், பாமகவால் கூட்டணிக் கட்சிகள் பலன் அடைந்தன. அவர்களால் பாமகவுக்குப் பலன் இல்லை. சொந்தக் கட்சிக்காரர்களைக்கூட கட்டுப்படுத்த முடியாத நிலையில் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அவரோடு சேர்ந்து நம்மால் வெற்றி பெற முடியுமா? எனவே உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு வாக்கு சதவிகிதத்தை நிரூபிக்க வேண்டும்” எனக் கூறியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உண்மையில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதற்கு காரணம், 2019 மக்களவைத் தேர்தல் முதல் அதிமுக கூட்டணியில் இருந்து தேர்தலை சந்தித்து வரும் பாமகவுக்கு பெரிய வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. அதிமுக அப்போது ஆளும் கட்சியாக இருந்தது. ஆனால், இப்போது எதிர்கட்சியாக இருப்பதால், பாமக வலுவாக உள்ள பகுதிகளில் நடைபெறும் ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் போட்டியிடுவதற்கு அதிமுக கூட்டணியை எதிர்ப்பார்க்க வேண்டியதில்லை என்று கருதுகிறது. அதே போல, பாமகவின் இந்த நகர்வை 2024ல் நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை மனதில் கொண்டுதான் மேற்கொண்டுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.