சென்னை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கடந்த டிசம்பர் 23ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் கோட்டூர்புரத்தை சேர்ந்த பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த வழக்கில் மாணவி அளித்த புகாரின் எப்.ஐ.ஆர் வெளியானது, காவல்துறை, அமைச்சர் முரண்பட்ட கருத்து என பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளது.
மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்தும், தி.மு.க அரசைக் கண்டித்தும், மாணவிக்கு நீதி கேட்டும் பல்வேறு அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று (ஜன.2) பா.ம.க மகளிரணி சார்பில் சவுமியா அன்புமணி தலைமையில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
ஆனால் காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்த முயன்ற சவுமியா அன்புமணி மற்றும் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில்,
போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்தது குறித்து பாமகவின் வழக்கறிஞர் கே.பாலு சென்னை நீதிமன்றத்தில் முறையீடு செய்தார்.
இந்த முறையீட்டை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வேல்முருகன், 'பாமக போராட்டத்தை அனுமதிக்க உத்தரவிட முடியாது' எனக் கூறினார். மேலும், 'அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்?'
பெண்கள் பாதுகாப்பில் உண்மையான கவனம் செலுத்தாமல் பாலியல் வன்கொடுமை வழக்கை அரசியல் ஆக்குவது ஏன்? போராட்டம் நடத்தும் ஒவ்வொரும் தங்கள் மனதில் கைவைத்து பெண்களுக்கு பாதுகாப்பு தரப்படும் என உத்தரவாதம் கொடுக்க முடியுமா?
வெறும் விளம்பரத்திற்காக போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கு அனைவரும் வெட்கப்பட வேண்டும். சமூகத்தில் ஆண் பெண் என பாகுபாடு இருப்பது வெட்கப்பட வேண்டிய விஷயம் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.