அரசியல் கட்சியினர் நடத்தும் பேரணிகள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் காவல்துறையினருக்கு, சம்பந்தப்பட்ட கட்சியினர் ஏன் கட்டணம் செலுத்தக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் எனவும், பஞ்சமி நிலங்களை மீட்க கோரியும் வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே. இளந்திரையன் முன்பு நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது, பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார். மேலும், இது போன்ற பொது நிகழ்ச்சிகளை நடத்த காவல்துறையினருக்கு ரூ. 25 ஆயிரம் ஏன் வழங்கக் கூடாது என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இருப்பினும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் எஸ். சங்கர், இதுபோன்ற உத்தரவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எந்த அரசியல் கட்சியும் பணம் செலுத்தாமல் பொதுக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த முடியாது எனவும் தெரிவித்தார். அரசியல் கட்சிகள் மக்கள் நலனை வலியுறுத்தவே இதுபோன்ற கூட்டங்களை நடத்துகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து, மேடைகள் அமைப்பது, நூற்றுக்கணக்கானோர் அமர்வதற்கு வசதிகள் செய்வது போன்றவற்றுக்காக கணிசமான பணம் செலவளிக்கும் அரசியல் கட்சியினர், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளும் காவல்துறையினருக்கு ஏன் கட்டணம் செலுத்தக் கூடாது? எனக் கேள்வி எழுப்பினார்.
எதிர்காலத்தில் தனது பரிந்துரைகளை பரிசீலிக்குமாறு கூடுதல் அரசு வழக்கறிஞரை நீதிபதி கேட்டுக் கொண்டார். முன்னதாக, திருப்போரூர் ரவுண்டானா அருகே பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு உள்ளூர் காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து நாம் தமிழர் கட்சியின் திருப்போரூர் மாவட்டச் செயலாளர் டி. சசிகுமார் நீதிமன்றத்தை அணுகினார்.
ஆனால், பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அலுவலகம் அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்திற்கு மாற்ற மனுதாரருக்கு விருப்பம் உள்ளதாக சங்கர் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குமாறு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.