தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத் தேர்வில் முறைகேடு நடந்ததால் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :
ஆசிரியர் தேர்வு வாரியத்தால், அரசு தொழில்நுட்ப கல்லூரி (பாலிடெக்னிக்) விரிவுரையாளர்கள் நேரடி நியமனத்துக்காக 16.9.2017 அன்று நடத்தப்பட்ட போட்டி எழுத்துத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
தேர்வுக்கான விளம்பரம் வருகிற மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்பட்டு, ஆகஸ்டு மாதம் முதல் வாரத்தில் தேர்வு நடத்தப்படும்.
தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய தேதி மற்றும் தேர்வுக்கான தேதி ஆகியவை ஆசிரியர் தேர்வு வாரியத்தால் விரைவில் அறிவிக்கப்படும். ஏற்கனவே விண்ணப்பித்த தேர்வர்கள், தேர்வுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஆனால் தேர்வு கட்டணம் செலுத்த தேவை இல்லை. புதிய விண்ணப்பதாரர்களும் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
இந்த தேர்வு திடீரென ரத்து செய்ய காரணம் என்ன என்று விசாரித்த போது பல அதிர்ச்சி தகவல்கள் கிடைத்தன. அதன் விபரம் வருமாறு:
முன்னதாக, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் செப்டம்பர் மாதம் 1,058 பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களுக்கான தேர்வை நடத்தியது. இந்த தேர்வை 1 லட்சத்து 33 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
நவம்பர் 7-ந் தேதி தேர்வு முடிவு வெளியானது. தேர்வு முடிவில் குளறுபடிகள் இருப்பதாக தேர்வர்களிடம் இருந்து தேர்வு வாரியத்துக்கு புகார்கள் வந்தன. அதாவது பலர் பணம் கொடுத்து மார்க் பட்டிலை திருத்தியதாக புகார்கள் கூறப்பட்டன. இதனால் தேர்வு முடிவு திரும்ப பெறப்பட்டது.
பின்னர் தேர்வு எழுதியவர்களின் விடைத்தாள்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் டிசம்பர் 11-ந் தேதி வெளியிடப்பட்டது. அப்போது பலருக்கு எழுத்துத்தேர்வு முடிவிலும், விடைத்தாள் நகலிலும் மதிப்பெண் வித்தியாசம் இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் ஏராளமானோருக்கு அதிக மதிப்பெண்கள் வழங்கி முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த முறைகேடு குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர் செயலர் உமா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது, முறைகேடு நடந்து இருப்பது உறுதியானது.
இது தொடர்பாக மதிப்பெண்களை திருத்துவதற்காக குறுக்கு வழியை கையாண்ட தேர்வர்கள், உடந்தையாக இருந்த அதிகாரிகள், மதிப்பெண் பட்டியலை இணையதளத்தில் பதிவிடும் போது திருத்திய டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் என மொத்தம் 156 பேர் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மோசடி, நம்பிக்கை மோசடி, ஆவணங்களை திருத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த முறைகேடு தொடர்பாக இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கைதானவர்களில் சிலர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த விவகாரத்தில் முக்கிய புள்ளிகள் சிலர் சிக்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை அரசு ரத்து செய்ததுள்ளது. இது பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு எழுதியவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Why the polytechnic lecturer selection is suddenly canceled shocking information
குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணிக்கு விவசாயிகள் டெல்லிக்குள் செல்லலாம்!
விஜய் மக்கள் இயக்கம் மீது சட்டப்படி நடவடிக்கை – தந்தை சந்திரசேகருக்கு விஜய் பப்ளிக் நோட்டிஸ்
ஹெல்தி ப்ளஸ் டேஸ்டி: முருங்கைக் கீரை சாம்பார் சிம்பிள் செய்முறை
வேளாண் சட்டத்தை நிறுத்திவைக்க ஒப்புதல்: மத்திய அரசு முடிவுக்கு 5 காரணங்கள்