இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தமிழகத்தில் உள்ள தூத்துக்குடியில் தனது இரண்டாவது செயற்கைக்கோள் ஏவுதளம் அமைப்பதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது.
Advertisment
இஸ்ரோவின் இரண்டாவது செயற்கைக்கொள் ஏவுதளம் தூத்துக்குடி, குலசேகரப்பட்டினத்தில் சுமார் 2,300 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ளது. இது ஆந்திராவில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா முதல் செயற்கைக்கோள் ஏவுதளத்தைவிட சிறியது. ஸ்ரீஹரிகோட்டா 145 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. அதன் கடற்கரையோர நீளம் மட்டும் 27 கிலோமீட்டர் ஆகும்.
மத்திய அணுசக்தி மற்றும் விண்வெளி துறையின் அமைச்சர் ஜிதேந்திர சிங் கடந்த நவம்பர் 28 ஆம் தேதி மாநிலங்களவையில், தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினம் அருகே செயற்கைக்கோள் ஏவுதளம் அமைக்கும் திட்டம் உள்ளது என்று கூறினார்.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, “செயற்கைக்கொள் ஏவுதளத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. அதற்கு சுமார் 2,300 ஏக்கர் பரப்பளவு நிலம் தேவையானதாக உள்ளது. செயற்கைக்கோள் ஏவுதளம் அமைப்பதற்கான திட்ட நடவடிக்கைகள் ஆறு மாதங்களில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.
இஸ்ரோவின் முதல் செயற்கைக்கோள் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டா வரும் ஆண்டுகளில் விண்வெளி நிறுவனம் செயற்கைக்கோள் செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது என்று அறிவித்த பிறகு இந்த இரண்டாவது செயற்கைக்கோள் ஏவுதளம் அமைய உள்ளது.
கடந்த நவம்பர் 27 ஆம் தேதி இஸ்ரோ, கண்காணிப்பு செயற்கைக்கோள் கார்டோசாட் -3 மற்றும் 13 அமெரிக்க நானோ செயற்கைக்கோள்களை ஏவியது. செப்டம்பர் மாதத்தில் இஸ்ரோ சந்திரயான் -2 வின்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து, சந்திரயான் - 3 திட்டப் பணிகள் நடந்துகொண்டிருக்கிறது. மேலும், இஸ்ரோ 2022-இல் வின்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்காக தயாராகி வருகிறது.
இஸ்ரோ தலைவர் கே.சிவன் ஊடகங்களிடம் கூறுகையில், தூத்துக்குடி ஏவுதளம் புதிதாக மேம்படுத்தப்பட்ட சிறிய ரக செயற்கைக்கோள்களை செலுத்துவதற்கு (எஸ்.எஸ்.எல்.வி) உதவும். அது தயாரானதும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து 2020 முதல் மூன்று மாதங்களுக்கு சுமார் 500 கிலோ எடைகொண்ட செயற்கைக்கோள்கள் ஏவப்படும் பிறகு தூத்துக்குடியிலிருந்து செலுத்தப்படும்” என்று கூறினார்.
இஸ்ரோ தனது இரண்டாவது வின்வெளி செயற்கைக்கோள் ஏவுதளத்துக்கு ஏன் தூத்துக்குடியை தேர்வு செய்தது என்பது குறித்து ஊடகங்களிடம் பேசிய கே.சிவன், “தூத்துக்குடி கடற்கரைக்கு அருகாமையில் இருப்பதால் நேராக தெற்கு நோக்கி ஏவப்படுவதற்கு ஏற்றதாக அமைந்துள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து செலுத்தினால் இலங்கையைச் சுற்றி ராக்கெட்டுகள் பறக்க வேண்டியிருப்பதால், அதேபோல தெற்கு நோக்கிச் செல்லும் ஏவுதல் சாத்தியமில்லை. தூத்துக்குடியிலிருந்து ராக்கெட்டுகள் நேராக தெற்கு நோக்கி பயணிக்க முடியும். அவை அதிக சுமைகளைச் சுமக்க அனுமதிக்கும். அதே நேரத்தில், துத்துக்குடி மாவட்டம் விண்வெளியில் துருவ சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும்.
பொதுவாக துருவ செயற்கைக்கோள்கள் பி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள் வாகனம் மூலம் ஏவப்படுகிறது. அதற்கு தூத்துக்குடி ஏற்றதாக இருக்கும். ஆனால், அது புவி சுற்றுப்பாதைக்கு ஏவப்படும் ஜி.எஸ்.எல்.வி செயற்கைக்கோள்களுக்கு ஏற்றது அல்ல.” என்று கூறினார்.
தற்செயலாக, ஸ்ரீஹரிகோட்டா வின்வெளி நிறுவனம் கடற்கரைக்கு அருகாமையில் தேர்வு செய்யப்பட்டது. இடத்தை தேர்ந்தெடுக்கும்போது பாதுகாப்பு காரணங்களும் காரணிகளாக இருந்தன.
ஒரு செயற்கைக்கோள் ஏவப்பட்ட பிறகு அது நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லவில்லை என்றால் அதை செயலிழக்க்க செய்ய வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், செயற்கைக்கோள், கடல் மற்றும் பாலைவனத்தில் விழ வேண்டும் இல்லாவிட்டால் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்தால் பெரிய அழிவை ஏற்படுத்தும்.
சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா செயற்கைக்கோள் ஏவுதளத்தைப் போலவே, தூத்துக்குடியும் பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் விண்வெளி செயற்கைக்கோள் ஏவுதளத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பொதுவாக ஒரு செயற்கைக்கோள் ஏவுதளம் கிழக்கு கடற்கரையிலும் பூமத்தியரேகைக்கு அருகிலும் இருக்க வேண்டும். தூத்துக்குடி அதற்கு ஏற்ற இடமாக இருக்கிறது.
பூமத்திய ரேகைக்கு அருகாமையில் இருப்பதால் கணிசமான எரிபொருளை மிச்சப்படுத்தும் என்று இஸ்ரோவின் பதிப்பு மற்றும் மக்கள் தொடர்பு இயக்குனர் தேவிபிரசாத் கார்னிக் கூறுகிறார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மகேந்திரகிரியில் இஸ்ரோ தனது திரவ உந்துவிசை அமைப்புகள் மையத்தை (எல்.பி.எஸ்.சி) கொண்டுள்ளது. இது பி.எஸ்.எல்.வி.க்கான இரண்டாவது மற்றும் நான்காவது நிலை இயந்திரங்களை ஒருங்கிணைக்கிறது.
மகேந்திரகிரியிலிருந்து ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது நிலை இயந்திரங்களை கொண்டு செல்வதற்கு பதிலாக, 100 கி.மீ தூரத்தில் உள்ள குலசேகரபட்டினத்தில் கட்டப்பட்டால் அவற்றை ஏவுதளத்திற்கு எடுத்துச் செல்வது எளிதாக இருக்கும் என்பதால் தூத்துக்குடி தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறது.