குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னை, செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களில் இன்று லேசானது முதல் மித அளவிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இதன்படி, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை பரவலாக மழை பெய்துள்ளது.
சென்னையில் புரசைவாக்கம், எழும்பூர், பம்மல், வேப்பேரி, பெரியமேடு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் மழை பெய்தது. குரோம்பேட்டை, பல்லாவரம், பம்மல், தாம்பரம், ஆலந்தூர் பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்தது. சென்னையில் சில இடங்களில் சாரல் மழையும் பெய்தது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல்,அனகாபுத்தூர், புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது.
புதுச்சேரி முழுவதும் விடியற்காலை முதல் லேசான இடியுடன் கூடிய மழை பெய்தது. பொதுமக்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பித்து மகிழ்ச்சியோடு இந்த மழையை வரவேற்றனர்.
தென்தமிழகத்தில் சிவகங்கைக்கு உட்பட்ட காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்துள்ளது. மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. திண்டுக்கல், மணிக்கூண்டு, என்.ஜி.ஓ. காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. புதுக்கோட்டையில் அரிமளம், பொன்னமராவதி, திருமயம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. இதனால், அந்த பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.
இதனிடையே, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராணிப்பேட்டை, வேலூர், சேலம், திண்டுக்கல், மதுரை, தேனி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.