டெல்டா மாவட்டங்களை கூறு போட்ட கஜா புயலின் கோரத்தாண்டவம் ஒருபுறமிருக்க, புயல் பாதிப்பை காரணம்காட்டி, இடைத்தேர்தலுக்காக காத்திருக்கும் 20 தொகுதிகளிலும் தேர்தல் தள்ளிப் போகுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
இடைத்தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள தலைமை தேர்தல் ஆணையர் ஓ.பி.ராவத், "பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே, 20 சட்டமன்ற தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தியே தீருவோம்!" என சூளுரைத்திருக்கிறார். ஆணையர் சூளுரைத்தாலும், இத்தொகுதிகளில் தேர்தலை எதிர்கொள்ள ஆளும் அ.தி.மு.க. விரும்புகிறதா? டி.டி.வி. தினகரனின் மனநிலை என்ன? தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்கள் என்ன முடிவில் இருக்கிறார்கள்? போன்ற பல கேள்விகள் அரசியல் அரங்கை வட்டமடிக்கிறது.
இதுகுறித்து பேசிய அ.தி.மு.க. மூத்த நிர்வாகி ஒருவர், "2016 தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் வெற்றி பெற்ற அ.தி.மு.க. வேட்பாளர் எஸ்.எம்.சீனிவேல், பதவியேற்புக்கு ஒருநாள் முன்னதாக மாரடைப்பால் காலமானார். இதனைத் தொடர்ந்து அத்தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார். இப்போது அவரும் உயிருடன் இல்லை.
இடைத்தேர்தலின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவிடமிருந்து, வேட்புமனுவில் கட்சியின் பொதுச்செயலாளர் என்கிற அடிப்படையில் பெருவிரல் கைரேகை பெறப்பட்டது. இதில் சர்ச்சையை ஏற்படுத்தி, தி.மு.க. வேட்பாளர் டாக்டர்.சரவணன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ. ஏ.கே.போஸே மறைந்துவிட்ட நிலையில், வழக்கு இன்னமும் நடந்து கொண்டிருக்கிறது. இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்ட பின்னர் தான், அந்தத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெறும் என ஓ.பி.ராவத் கூறியுள்ளார். ஒருவேளை வரும் சில வாரங்களில் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தலை அறிவித்தாலும் எங்களுக்கு கவலையில்லை. இத்தேர்தலை தள்ளிப்போடுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்.
இடைத்தேர்தல் நடைபெற்றால், போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வரும் மீட்பு பணிகளில் தொய்வு ஏற்படும். தேர்தல் கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தால், நிவாரண உதவிகளை வழங்கத் தடை ஏற்படும் என அரசுத் தரப்பில் தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் கடிதம் எழுத முடிவெடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் இறுதி வரையில் அடுத்தடுத்து புயல்கள் தாக்கவிருப்பதாக வானிலை ஆய்வு மையத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது. அதனையும் மேற்கோள் காட்ட அரசுத் தரப்பு தயாராகி வருகிறது.
ஒருவேளை அரசு அளிக்கும் கடிதத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டால், இடைத்தேர்தல் நெருக்கத்தில், தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களும் மீண்டும் தேர்தலில் போட்டியிட தடைவிதிக்கப்படும். அவர்கள் நீதிமன்றம் செல்வார்கள். இதைக் காரணம்காட்டி தேர்தலை ஒத்திவைக்கும் திட்டமும் கைவசம் இருக்கிறது.
109 எம்.எல்.ஏ.க்கள் பலத்துடன் ஆட்சி நகர்ந்து கொண்டிருக்கிறது. 20 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் முடிந்த பிறகு, ஆட்சியை தக்கவைக்க எடப்பாடியாருக்கு மேலும் 8 எம்.எல்.ஏ.க்கள் தேவை. இப்போதுள்ள சூழல் தேர்தலை எதிர்கொள்ளும் அளவிற்கு சாதகமாக இல்லை. பாராளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தலை நடத்திடவே தலைமை விரும்புகிறது." என்றார்.
அ.ம.மு.க. அமைப்புச் செயலாளர் ஒருவரிடம் பேசினோம். "இடைத்தேர்தல் நெருக்கத்தில் தங்களின் வேட்புமனு நிராகரிக்கப்படலாம் என்கிற கலக்கம் 18 தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களிடமும் உள்ளது. இதற்காக தங்கத் தமிழ்ச்செல்வன் தலைமையில் உச்சநீதிமன்றத்தை நாடி ஒரு விளக்கத்தை பெற முடிவெடுத்துள்ளனர். தேர்தல் ஆணையத்தின் கருத்தை கேட்ட பிறகு, உச்சநீதிமன்றம் விளக்கமளிக்கலாம். இந்த நடைமுறை முடிவடையும் வரையில் இடைத்தேர்தல் தள்ளிப் போகும்.
ஒருவேளை தேர்தலில் போட்டியிட வாய்ப்பில்லாத சூழல் ஏற்பட்டால், தங்களின் குடும்ப உறுப்பினர்களை களமிறக்க சிலர் முடிவெடுத்துள்ளனர். அரவக்குறிச்சியில் செந்தில்பாலாஜி தனது அண்ணன் அசோக்கை களமிறக்குகிறார். பாப்பிரெட்டிப்பட்டியில் தனது மகள் யாழினியை வேட்பாளராக்க பழனியப்பன் காய் நகர்த்தி வருகிறார். தகுதியான குடும்ப உறுப்பினர்கள் இல்லாதவர்களின் நிலை தான் பரிதாபம்!" என்றார்.
தி.மு.க.வின் கணக்கோ வேறு மாதிரியாக இருக்கிறது. இப்போது இடைத்தேர்தல் நடைபெற்றால், ஆட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறி, தி.மு.க., அ.ம.மு.க. என பிரியும். இதனால் எடப்பாடிக்கு தான் லாபம். தவிர, இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் அதிகார பலமும் அவர்களிடத்தில் தான் இருக்கிறது. பாராளுமன்றத் தேர்தலோடு இடைத்தேர்தல் நடைபெற்றால், வாக்குகளை ஒருங்கிணைத்து வேட்டையாட முடியும் என கருதுகிறது.
ஆக, களத்தில் மோதும் மூன்று முக்கியக் கட்சிகளும் இடைத்தேர்தலை இப்போதைக்கு விரும்பவில்லை. திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளில் இடைத்தேர்தலை விரைவாக நடத்தக் கோரி, மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. வரும் நவம்பர் 26-ம் தேதி விசாரணைக்கு வரும் இவ்வழக்கில், இடைத்தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் இதுவரை எடுத்த நடவடிக்கைகளை உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. தேர்தல் ஆணையம் என்ன பதிலளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.