சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி, திராவிடர் கழகம் நடத்திய மாநாட்டில் டி.ஆர்.பாலு பேசிய விஷயங்கள் சர்ச்சையாகி உள்ளது.
சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மதுரை பழங்காநத்தத்தில் திறந்தவெளி மாநாட்டை நேற்று மாலை திராவிடர் கழகம் நடத்தியது, இதில் கி. வீரமணி, தொல். திருமாவளவன், கே.எஸ்.அழகிரி. செந்தில்பாலாஜி, உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
இந்நிலையில் இந்த நிகழ்வில் டி.ஆர் பாலு பேசினார். “ ராமேஷ்வரம் கோயிலுக்குள் இருந்த மூன்று தீர்த்தங்கள் பொதுமக்களிடம் கருத்து கேட்காமல் இடம் மாற்றி வைக்கப்பட்டன. இது மத நம்பிக்கையை பாதிக்காதா ? ” என்று அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனைப் பார்த்து கேட்டார். தொடர்ந்து இதற்கான பதிலையும் அவர் கூறினார் “ உங்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. உங்கள் தந்தைக்குத் தெரிந்திருக்கும். நீங்கள்தான் நவீன பி.டி.ஆராச்சே? என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் “ மக்களுக்கான திட்டங்களை உடனே நிறைவேற்ற வேண்டும். அதிகாரிகள் முதலில் ஒத்துக்கொள்ள மாட்டார்கள். நான் அமைச்சராக இருந்தபோது அப்படித்தான். அதையும் மீறித் திட்டங்களை கொண்டு வந்தேன். தமிழ்நாட்டில் நிதியமைச்சர் பி.டி.ஆர் நிதி ஒதிக்க மறுப்பதாக அமைச்சர்கள் கூறுகிறார்கள். அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு, கொடுக்காமல் இருக்காதீர்கள். நான் தலைவராக மதிப்பவர்களை யாராவது சீண்டினால் பார்த்துகொண்டு சும்மா இருக்க மாட்டேன். முதல்வர் ஸ்டாலின் அல்லது அய்யா வீரமணி மீது யாராவது கைவைத்தால், நான் சும்மா இருக்க மாட்டேன் . அவர் கையை வெட்டுவேன். உடல் பலம் உள்ளவன். கண்டிப்பாக வெட்டுவேன்” என்று அவர் பேசினார்.