கோர்ட்டில் நல்ல தீர்ப்பு கிடைக்கவில்லை என்றால் திமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்வார்களா என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலினிடம் கேட்ட போது, ‘உங்களின் பெருந்தன்மைக்கு நன்றி என்று பதிலளித்தார்.
தமிழக அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்க, திமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு கூடியது. ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் இரண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக கவர்னர் டெல்லியில் இருந்து சொல்வதைக் கேட்டு செயல்படுகிறார். அதனால்தான், அதிமுகவில் 18 எம்.எல்.ஏ.க்கள் நீக்கப்பட்டுள்ளார்கள். இந்த ஜனநாயக படுகொலையை செய்த கவர்னர், முதல்வர், சபாநாயகர் ஆகியோருக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளோம். மக்களின் வரிப்பணத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. அரசு விழாவானது கட்சி விழா போல செயல்படுகிறது. மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவதை கண்டித்துள்ளோம்.
தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பெரும்பான்மை இல்லை என்பதை சொல்லி நீதிமன்றத்துக்கு சென்றுள்ளோம். நாளை விசாரணை நடக்கிறது. கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். கோர்ட் தீர்ப்பு வந்த பின்னர் மீண்டும் சட்ட மன்ற உறுப்பினர்களை அழைத்து விவாதித்து முக்கிய முடிவு எடுக்கப்படும்.
கேள்வி : இந்த ஆட்சி எத்தனை நாட்கள் நீடிக்கும்?
பதில் : அது உங்கள் ஆசை. நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வருகிறது என்று பார்ப்போம்.
கேள்வி : நீங்களும் இந்த ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்கிறீர்கள். டிடிவி தினகரன் தரப்பும் ஆட்சியை அகற்ற வேண்டும் என்று சொல்கிறார். இது இருவரும் பேசி வைத்து சொல்வதாக விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறதே?
பதில் : ஐனநாயக மக்கள் விரோத குதிரை பேர அரசு நீடிக்கக் கூடாது என்று சொல்கிறோம். அவர்களும் அதை சொல்கிறார்கள். இதில் பேசி வைத்து சொல்ல என்ன இருக்கிறது.
கேள்வி : திமுக எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு ராஜினாமா செய்யும் திட்டம் இருக்கிறதா?
பதில் : உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி.
கேள்வி : உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று முதல்வர் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளாரே?
பதில் : முதலில் உள்ளாட்சி தேர்தலை நடத்த தயாராக இருக்கிறார்களா என்று கேட்டுச் சொல்லுங்கள்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.