நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் வெள்ளிக்கிழமை (டிச.30) செய்தியாளர்களை சந்தித்தார்.
பகுத்தறிவா? மூட நம்பிக்கையா?
அப்போது அவர் பேசுகையில், “வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் தேவை இல்லை என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம்.
ஒருவர் எழுதாத பேனாவிற்கு சிலை வைப்பது பகுத்தறிவு. எழுதும் பேனாவை ஆயுதப் பூஜைக்கு பூஜை அறையில் வைத்து கும்பிட்டால் அது மூட நம்பிக்கையா? எனக் கேட்கிறார்.
மெரினா கடற்கரையில் இவர்களுக்கு சமாதியே அதிகம். பெருந்தலைவர் காமராஜர், கக்கன், முத்துராமலிங்க தேவர், சுந்தரலிங்கனார், வெண்ணி காலடி, தீரன் சென்னிமலை உள்ளிட்ட தலைவர்களை கூட அவர்களை விட இவர்கள் பெரியவர்களா? என்றார்.
சூழலியல் அக்கறை உள்ளதா?
மேலும், “செக்கிழுத்த செம்மலுக்கு வைத்த நினைவிடம் எங்கே?” எனவும் கேள்வியெழுப்பினார். தொடர்ந்து, “உலக புகழ்பெற்ற கடற்கரையை புதைக் குழியாக மாற்றிய பெருமை யாருக்கு? கடலுக்குள் எதற்கு பேனா வைக்கிறீர்கள்? இதனால் யாருக்கு என்ன இலாபம்?
உங்களுக்கு சூழலியல் குறித்து அக்கறை உள்ளதா? காப்புக் காடுகள் அருகில் கல்குவாரி உள்ளது. மலையை நொறுக்கக் கூடாது என்பதே எங்களது நிலைப்பாடு” என்றார்.
தொடர்ந்து பேனா நினைவுச் சின்னம் தொடர்பாக பொதுமக்கள் கருத்துக் கணிப்பில் கலந்து கொள்வீர்களா? என்ற கேள்விக்கு, “கலந்துகொண்டு எங்களின் எதிர்ப்பை பதிவு செய்வோம்” என்றார்.
முதியோர் உதவித் தொகை
முதியோர் உதவித் தொகை தொடர்பான கேள்விக்கு, “கடந்த 3 மாத காலமாக இது கொடுக்கப்படவில்லை. வயது முதிர்ந்த உழைக்கும் திறனற்ற முதியோருக்கு ஓய்வுத் தொகை கொடுக்காத நீங்கள், கல்லூரியில் பயிலும் எனது தங்கைகள் உதவித் தொகை கேட்டார்களா?
எதற்கு கொடுக்குறீங்க? முதியோர்கள் வாக்கு செலுத்தும் திறனில் இல்லை. இவர்கள் வாக்குச் செலுத்தும் திறனில் உள்ளனர்” என்றார்.
மகளிர் மேம்பாடு
தொடர்ந்து சீமான் பேசுகையில், “சமூக நீதியின் காவலர்கள் எனப் போட்டுக்கொள்கிறீர்களே? இந்த சமூக நீதியை எப்படி என் மக்களுக்கு வழங்குவீர்கள்? என்றார்.
மேலும், “குடிவாரி (சாதி) கணக்கெடுப்பு நடத்தாதது ஏன்? பெரியாரே இதனை சொல்லியிருக்கிறார்” என்றார்.
இதையடுத்து, மகளிர் தலைநிமிர மாநிலம் உயரும் என்கிறீர்கள். இதை நான் வரவேற்கிறேன். நீங்கள் மகளிருக்கு கொடுத்த உயர்வு என்ன?
துணிவா? வாரிசா?
எத்தனை அமைச்சர்கள் கொடுத்துள்ளீர்கள்? சட்டப்பேரவை, பாராளுமன்றம் மற்றும் கட்சியில் எத்தனை பொறுப்பு கொடுத்துள்ளீர்கள்?
நாடெங்கிலும் சாராயக் கடை திறந்துவைத்துள்ளீர்கள்? இதன் வருமானத்தை பெருமையாக வெளியிடுகின்றனர். ஆண்டுக்கு கிட்டத்தட்ட ரூ.50 ஆயிரம் கோடி கிடைக்கிறது.
அப்படியிருக்க எதற்கு இலவசம்? தற்போது பொங்கலுக்கு அஜித் படமும் விஜய் படமும் வருகிறது. நீங்கள் பாருங்கள் ஒரே நாளில் 35 கோடி வசூல் என செய்திகள் வரும்” என்றார்.
மேலும், “மது வருமானம் ரூ.50 ஆயிரம் கோடி மக்களிடம் இருந்தால் அவர்கள் இலவசத்துக்கு ஏங்க வேண்டிய சூழல் ஏற்படாது” என்றார்.
சுழற்சி முறையில் முதல்வர் பதவி
மேலும், “வாரிசு அரசியல் செய்வதில் நீங்கள் விருப்பமாகவும், கட்டாயமாகவும் உள்ளீர்கள். ஒரு இரண்டரை வருடம் நீங்கள் வேறு யாருக்கும் கொடுக்க வேண்டாம். உங்கள் குடும்பத்தில் உள்ள கனிமொழிக்கு முதலமைச்சர் பொறுப்பு கொடுங்கள்.
மகளிர் உயரட்டும். நான் நினைக்கிறேன், மு.க. ஸ்டாலினை விட தகுதியானவர் கனிமொழி என்று. அதனை கட்சிக்காரனும், பொது மக்களும் மறுக்க மாட்டார்கள். சுழற்சி முறையில் கொடுங்கள்” என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/