'தமிழகத்தில் மாபெரும் போராட்டக்களம் அமைப்போம்' - காவிரி விவகாரம் குறித்து ஸ்டாலின் எச்சரிக்கை!

மாபெரும் போராட்டக் களம் அமைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு செய்யும் பச்சை துரோகம் தொடருமானால், மாபெரும் போராட்டக் களம் அமைப்பதைத் தவிர வேறு மார்க்கமில்லை என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்

மேலும், “காவிரி நதி நீர் உரிமையில் தமிழ்நாட்டை திட்டமிட்டு மீண்டும் மீண்டும் கடுமையாக வஞ்சித்து வரும் மத்திய அரசு,மேலாண்மை வாரியம் அமைக்க கிஞ்சிற்றும்மனமின்றி, ஸ்கீம் என்றால் என்ன என அர்த்தம்கேட்டு காலதாமதம் செய்ததுடன், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மே 3ந்தேதியான இன்று வரைவு அறிக்கையையும் தாக்கல் செய்யவில்லை. கர்நாடக சட்டமன்றத் தேர்தலைக் காரணம் காட்டி, பிரதமரும் அமைச்சர்களும் அங்கே பிரச்சாரத்தில் இருப்பதால், வரைவு அறிக்கை தொடர்பாக ஒப்புதல் பெற முடியவில்லை என நீதிமன்றத்திலேயே தெரிவித்திருக்கிறார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர். தகவல் தொழில்நுட்பம் இவ்வளவு வளர்ந்துள்ள நிலையில் மின்னஞ்சல்மூலமாகவோ வேறு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியோ ஒரு ஒப்புதலை கூட பெறமுடியாத நிலையில் ஒரு நொண்டிச் சாக்கை மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்திருப்பது தமிழகத்தை ஏமாற்றும் துரோகச் செயலின் தொடர்ச்சி தானே தவிர வேறில்லை. இதற்காக மத்திய அரசை கடுமையாக கண்டித்து இன்றுமாலையே வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் . தேர்தல் லாபத்திற்காக மத்தியபா.ஜ.க. அரசு தமிழர்களை வஞ்சிக்கிறதுஎன்பதை அதன் தலைமை வழக்கறிஞரே பதிவு செய்துள்ள நிலையில், தமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசு எவ்வித மானஉணர்ச்சியுமின்றி ஏனோதானோவெனச்செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  மத்திய அரசு மீது தமிழக அரசால் தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் நிலை என்ன என்பது கூட தெரியாதபடி, மாநில அரசின் சட்டத்துறையும் அதன் வழக்கறிஞர்களும் பெயரளவுக்கு செயல்படும் திறனற்ற போக்குநிலவுகிறது. டெல்லி வரை சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, காவிரி விவகாரம் குறித்து  பிரதமரை தனியே சந்தித்து பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பது ஒட்டு மொத்த தமிழ்நாட்டு மக்களுக்கும் மோடி அரசு இழைத்துள்ள அவமானமாகும். அந்த அவமானத்தைத் துடைத்தெறிவதற்கானமுயற்சி அ.தி.மு.க. ஆட்சியாளர்களிடம் தென்படவே இல்லை.

தமிழகத்திற்கு இந்த மாத நீர்அளவாக 4 டி.எம்.சி. தண்ணீர்திறந்துவிடவேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவை மதித்து, கர்நாடக அரசு உடனடியாக அதனை செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு போலதேர்தல் காரணங்களுக்காக நீதிமன்ற உத்தரவுகளை இழுத்தடிக்கும் செயலைஅண்டை மாநிலமான கர்நாடகத்தை ஆளும் அரசு தவிர்க்கும் என எதிர்பார்க்கிறேன்.
 காவிரியில் தமிழகத்திற்கு தொடர்ந்து நடைபெற்று வரும் துரோகங்களுக்கு தீர்வு காண உச்சநீதிமன்றம் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகும். வார்த்தைகளில் கண்டிப்பு காட்டிவிட்டு, கால அவகாசத்தை நீட்டித்துக் கொண்டே போவதென்பது தமிழகத்திற்கான நீதியை சிறிது சிறிதாக மழுங்கச் செய்வதாகவே அமைந்துவிடும். வழக்கு விசாரணை மே 8ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினமாவது தமிழகத்தின் நலனையும் உரிமையையும் கருத்திற் கொண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கும் என்ற கடைசி நம்பிக்கை மட்டுமே மிஞ்சியுள்ளது” என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close