காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதில், தமிழகத்துக்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அளவில் இருந்து 14 டிஎம்சி நீர் குறைக்கப்பட்டதுடன், 6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. வரும் மார்ச் 20-ம் தேதிக்குள் அந்த வாரியம் அமைக்கப்பட வேண்டும்.
இதையடுத்து, காவிரி விவகாரம் தொடர்பாக தமிழக அரசு சார்பில் கடந்த மாதம் 22-ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில், அனைத்துக்கட்சித் தலைவர்கள், விவசாய சங்கத் தலைவர்களை கொண்ட குழு, பிரதமரை சந்தித்து காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்குப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைப்பது குறித்து வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதேசமயம், கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காவிரி பிரச்சினை முக்கிய பங்கு வகிக்கும் எனத் தெரிகிறது. குறிப்பாக, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் மூலம் கர்நாடகாவுக்கு 14 டிஎம்சி கூடுதல் நீர் கிடைத்ததை ஆளும் காங்கிரஸ் சாதகமாகப் பயன்படுத்தும். அதேநேரம், குறிப்பிட்ட தேதிக்குள் வாரியத்தை மத்திய அரசு அமைத்தால், கர்நாடக தேர்தலில் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என பாஜக கருதுகிறது. இதனால், வாரியம் அமைப்பதை ஒத்திவைக்கும்படி மத்திய அரசை பாஜக வற்புறுத்தி வருவதாக கூறப்படுகிறது.
6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிடில், உச்ச நீதிமன்றம் வழங்கிய கால அவகாசத்துக்குப் பிறகு வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு முறையிடும். அப்போது, தேர்தல் நடத்தை விதிமுறைகள் தடையாக இருப்பதாக, மத்திய அரசு நீதிமன்றத்தில் காரணம் கூற முடியும். தமிழக அரசு மனு மீது உச்ச நீதிமன்றம் வழங்கும் மறுஉத்தரவால், மத்திய அரசுக்கு வாரியம் அமைப்பதில் சிக்கல் இருக்காது. அதற்குள் தேர்தலும் முடிந்துவிட வாய்ப்புள்ளதால், அதற்கு கர்நாடகாவில் பெரிய அளவு எதிர்ப்பும் இருக்காது. எனவே, சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு வாரியம் அமைப்பது கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஜக எண்ணுவதாக தெரிகிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழக அரசின் சார்பில் மகளிருக்கு இருசக்கர வாகன மானியம் வழங்கும் திட்ட தொடக்க விழா கடந்த 24-ம் தேதி சென்னையில் நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற இவ்விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, "காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழுவை விரைவில் அமைக்க வேண்டும்" என பிரதமர் முன்னிலையிலேயே கோரிக்கை விடுத்தார். ஆனால், அதன்பிறகு பேசிய பிரதமர் மோடி, காவிரி தொடர்பாக எதுவுமே சொல்லவில்லை.
இதன்பிறகு, பிரதமர் டெல்லி திரும்பிய போது, விமான நிலையத்தில் முதல்வர் பழனிசாமி வழியனுப்பி வைத்தார். அப்போது, பிரதமரிடம் காவிரி வாரியம் அமைப்பது தொடர்பான கோரிக்கை மனுவை முதல்வர் அளித்தார்.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேட்டி அளித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, '6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும்' என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய தம்பிதுரை, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தாமதமானால் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம். 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காவிட்டால் அதிமுக போராட்டம் நடத்தும் என்று கூறிய அவர், தமிழக மக்களின் நலன் காக்க பாடுபடுவோம் என்று உறுதிப்பட தெரிவித்தார்.