மதுரையில் ஜூலை 15-ம் தேதி நடைபெறும் கலைஞர் நூற்றாண்டு நூலகத் திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை செல்ல உள்ளதால், தனது அண்ணன் மு.க. அழகிரி வீட்டுக்கு செல்வாரா என்ற எதிர்பார்ப்பு தி.மு.க-வினர் மத்தியில் எழுந்துள்ளன.
தி.மு.க தலைவரும் முன்னாள் முதல்வருமான மறைந்த கருணாநிதியின் மகன்கள் மு.க. ஸ்டாலினும் மு.க. அழகிரியும் வடக்கு - தெற்காக பல வருடங்களாக இருக்கிறார்கள். மு.க. அழகிரி நீண்ட காலமாக மதுரையிலேயே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
தி.மு.க-வில் யாருக்கு முக்கியத்துவம் என்பது தொடர்பாக ஏற்பட்ட கருத்துவேறுபாடுகளைத் தொடர்ந்து, மு.க. ஆழகிரி 2014-ம் ஆண்டு தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, 2018-ம் ஆண்டு கலைஞர் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு, மு.க.ஸ்டாலின் தி.மு.க தலைவரானார். 2021-ம் ஆண்டு தி.மு.க மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சியைப் பிடித்த பிறகும், மு.க. அழகிரி கட்சியில் சேர்ப்பது குறித்து எந்த பேச்சும் இல்லை.
மு.க. ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றபோது, கோரோனா காரணமாக மு.க. அழகிரி பங்கேற்கவில்லை. அனால், அவருடைய மகன் தயாநிதி அழகிரி பங்கேற்றார்.
மு.க. ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு, மதுரைக்கு சுற்றுப் பயணம் செல்லும்போதெல்லாம், மு.க. ஸ்டாலின் தனது அண்ணன் மு.க. அழகிரியை சந்திப்பாரா என்ற எதிர்ப்பார்ப்பும் கேள்விகளும் தி.மு.க-வினர் மத்தியிலும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியிலும் எழுந்து வந்திருக்கிறது.
இதைவிட, பொதுவெளியில், ஊடகங்களின் முன்பு மு.க. ஸ்டாலினும் அழகிரியும் நேருக்கு நேராக சந்தித்துப் பேசிக்கொண்டதில்லை. ஆனாலும், குடும்ப நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்துகொள்கிறார்கள்.
அண்மையில் செய்தியாளர்கள் அமைச்சர் உதயநிதியிடம் “அப்பாவும் பெரியப்பாவும் (மு.க. ஸ்டாலினும் மு.க. அழகிரியும்) சமாதானமாகிவிட்டார்களா?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த உதயநிதி, “அவர்கள் எப்போது சண்டை போட்டார்கள்? சமாதானம் ஆவதற்கு? அப்பாவும் பெரியப்பாவும் சந்தித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.” என்று கூறினார்.
இந்நிலையில், கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவைத் தொடர்ந்து, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் திறப்பு விழா ஜூலை 15-ம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் மதுரை செல்கிறார். இதனால், மு.க. ஸ்டாலின் மதுரையில் இருக்கும் தனது அண்ணன் மு.க. அழகிரி வீட்டுக்கு சென்று சந்தித்துப் பேசுவாரா என்ற எதிர்பார்ப்பு தி.மு.க-வினர் மத்தியில் எழுந்துள்ளது.
பொதுவெளியில் ஊடகங்களின் முன்பாக இதுவரை மு.க. ஸ்டாலினும் மு.க. அழகிரியும் சந்தித்துப் பேசிக்கொண்டதில்லை என்ற நிலையில், மதுரை செல்லும் மு.க. ஸ்டாலின் இந்த முறையாவது தனது சகோதரர் மு.க. அழகிரி வீட்டுக்கு சென்று சந்திப்பாரா? என்று அழகிரி ஆதரவாளர்களும் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.