தமிழ்நாட்டில் வரும் பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த கட்சி தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த வகையில், கோவையில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை வந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது கட்சி வேட்பாளர்கள் ஒரு வருடத்திற்குள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால், பதவி விலகுவதாக எழுத்துப்பூர்வ உறுதிமொழியை அளித்துள்ளனர். மேலும், எங்கள் வேட்பாளர் வெற்றி பெற்றால், ஒவ்வொரு மாதமும் செயல்பாடுகள் குறித்த அறிக்கையை மக்களுக்கு வழங்குவார்கள்.
தேர்தலை விட்டு வெளியேறுமாறு, கட்சி நிர்வாகிகளுக்கு வரும் மிரட்டல்கள் அவருக்கு வெகுமதியாகவே கருதப்படுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கிடைக்கும் ஒவ்வொரு வாக்குக்கும், அந்தந்த வேட்பாளர்கள் ஒரு மரக்கன்றை நடுவார்கள்" என தெரிவித்தார்.
பிரச்சார பாட்டு
உள்ளாட்சித் தேர்தலில் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு வாக்காளர்களை வலியுறுத்தி மக்கள் நீதி மய்யத்தின் பிரச்சாரப் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உங்கள் வார்டு கவுன்சிலர் நேர்மையானவராக இருக்க வேண்டுமெனில், நீங்கள் டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
அவர் தகுதியானவராக இருக்க வேண்டுமெனில், அப்போதும் டார்ச் லைட்டுக்கே வாக்களிக்க வேண்டும். டார்ச் லைட் சின்னத்திற்கு வாக்களியுங்கள், நாங்கள் எப்படி மாற்றுகிறோம் என்பதை நீங்கள் பார்க்கலாம் என பிரச்சாரப் பாடலில் கமல் சொல்வதை கேட்கமுடிகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil