தேவைக்கு அதிகமான பொறியியல் கல்லூரிகள் மூடப்படுமா என மத்திய அரசுக்கு நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், நாடு முழுவதும் பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க ஏதேனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? என்றும் கேட்டுள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக இணைப்பு பெற்ற மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தர அண்ணா பல்கலைக்கழக தொழில் கூட்டமைப்பு மையம் மாநில அளவிலான தி்ட்டம் ஒன்றை செயல்படுத்தி வருகிறது. இதன் கீழ் 30 தனியார் பொறியியல் கல்லூரிகளை மட்டும் தேர்வு செய்து, வளாக நேர்முகத்தேர்வு நடத்தப்படுவதாகக் கூறி கரூரைச் சேர்ந்த நடராஜன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், குறிப்பிட்ட கல்லூரிகளில் மட்டும் வளாக நேர்முகத்தேர்வு நடத்த தடை விதிக்க வேண்டுமென கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், கடந்த 8 ஆண்டுகளில் எத்தனை பொறியியல் கல்லூரிகளில் நேர்முகத் தேர்வு நடந்துள்ளது. அதில் எத்தனை பேர் பணி நியமனம் பெற்றுள்ளனர். கல்லூரிகளின் பெயர்களை பிரபலப்படுத்த இதுபோன்ற நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படுகிறதா? என்பது குறித்து கேள்விகள் எழுப்பி பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அதிக எண்ணிக்கையில் பொறியியல் கல்லூரிகளை தொடங்குவதால், பொறியியல் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுகிறது எனக்கூறி இந்த வழக்கில் மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை செயலாளரையும் எதிர்மனுதாராக சேர்த்து நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார். மேலும் நாடு முழுவதும் பொறியியல் பட்டதாரிகளின் வேலையில்லாத் திண்டாட்டத்தை சமாளிக்க ஏதேனும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டார். மேலும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலுக்கும் 12 கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார்.
அதில், ‘‘இந்தியாவில் எத்தனை பொறியியல் கல்லூரிகளில் எத்தனை மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதில் வெற்றிகரமாக படிப்பை முடித்து வெளியேறுபவர்கள் எத்தனை பேர்? எத்தனை பொறியியல் பட்டதாரிகள் தற்போது வேலையின்றி தவிக்கின்றனர்? அதில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளவர்கள் எத்தனை பேர்? தேவைக்கு அதிகமாக பொறியியல் கல்லூரிகள் இருப்பதால் கூடுதலாக உள்ள கல்லூரிகள் மூடப்படுமா? என்பன உள்ளிட்ட கேள்விகளை எழுப்பி விசாரணையை நவம்பர் 7ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.