நாடளுமன்றத்தில் மத்திய அரசுக்கு எதிராக இன்று நடைப்பெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதிமுகவின் நிலைப்பாடு குறித்து தற்போது எதிர்கட்சிகள் உட்பட அனைத்து கட்சிகளும் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
2003ம் ஆண்டு வாஜ்பாய் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு முதல் முறையாக மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடக்க உள்ளது. தெலுங்கு தேசம் கட்சியின் மனுவை லோக்சபா சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இன்று நடைபெறும் பாஜகவின் அனைத்து எம்.பிக்களும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது லோக்சபாவில் இருக்க வேண்டும் என்றும், தீர்மானத்திற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்றும் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மோடி அரசுக்கு எதிராக நடைப்பெறும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு அதிமுக அரசு எதிர்ப்பு தெரிவிப்பதற்கான பல்வேறு காரணங்களை முன்வைத்துள்ளது.
நாடாளுமன்றத்தில் அடுத்தக்கட்ட பரபரப்பு
தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்துள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு காங்கிரஸ் கட்சி உட்பட பிற எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் திமுகவும் இதற்கு ஆதரவு கரம் நீட்டியுள்ளது. மக்களவையில் திமுகவுக்கு உறுப்பினர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, ஆந்திரா மாநிலத்தினர் அவர்களின் பிரச்சனைக்காக கொண்டு வரும் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு நாம் ஆதரவு தரவுவதில்லை எத்தகைய பயனும் இல்லை என்றார். மேலும் காவிரி உட்பட தமிழகத்தின் பல பிரச்சனைகளுக்காக அதிமுக எம்பிக்கள் தொடர்ந்து 22 நாட்கள் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்த போது அவர்களுக்கு ஆதரவாக எந்த மாநிலமும் முன்வரவில்லை. எனவே இன்று நடைபெறும் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் அதிமுக பங்கேற்காது என்றார்.
நாடாளுமன்றத்தில் அதிமுகவுக்கு 50 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களில் 37 பேர் மக்களை உறுப்பினர்கள், 13 பேர் மாநிலங்களவை உறுப்பினர்கள். இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவுள்ள இந்த நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் மோடி அரசு எத்தகைய முடிவை சந்திக்கும் என்பது உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.