எழுத்தாளர், பேச்சாளர் என பன்முகத் தன்மை கொண்டவரும், தமிழக அரசின் 48-வது தலைமை செயலாளராக திறம்பட செயல்பட்டவருமான வெ.இறையன்பு, அரசுப் பணியிலிருந்து இன்று ஓய்வு பெறுகிறார்.
1963-ம் ஆண்டு ஜூன் மாதம் 16-ந் தேதி சேலம் மாவட்டத்தில் உள்ள காட்டூர் கிராமத்தில் வெங்கடாசலம்-பேபி சரோஜா தம்பதியருக்கு மகனாக பிறந்தார். நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்த இறையன்பு பள்ளி பருவத்திலேயே அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு தனது பயணத்தை தொடங்கினார்.
பி.எஸ்சி. (வேளாண்மை) பட்டப்படிப்பை முடித்த இவர், வணிக மேலாண்மை, ஆங்கில இலக்கியம், தொழிலாளர் மேலாண்மை, உளவியல் பிரிவில் முதுகலை பட்டமும், வர்த்தக நிர்வாகம், ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் என பல பட்டங்களுக்கு சொந்தக்காரர் இறையன்பு. பி.எஸ்சி. (வேளாண்மை) பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். அரசு பணிகளுக்கு மத்தியிலும் இதுவரை 154 புத்தகங்களை எழுதி உள்ளார்.
அப்படியிருக்க கடந்த 7.5.2021 அன்று நியமிக்கப்பட்டார். 1988-ம் ஆண்டு பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான இவர், ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 15-வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்தவர். 1990-ம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்ட உதவி ஆட்சியராக தனது ஐ.ஏ.எஸ். பணியை தொடங்கியவர், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், செய்தித்துறை, சுற்றுலாத்துறை என பல துறைகளின் செயலாளர், தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் முதன்மை செயலாளர், அண்ணா மேலாண்மை பயிற்சி நிறுவனத்தின் இயக்குனர் என பல முக்கிய பொறுப்புகளில் திறம்பட செயலாற்றி வந்தார்.
எளிமைக்கும், நேர்மைக்கும் பெயர் பெற்றவர் இறையன்பு. ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கோட் சூட் போட்டுக்கொண்டு நிற்கும் ஆட்சியர்களை பார்த்தவர்களுக்கு, சாதாரண உடையிலேயே பங்கேற்று யதார்த்தை சுட்டிக்காட்டியவர் இறையன்பு. குறிப்பாக வெளியூர் ஆய்வுக்கு செல்லும்போது கூட தனது உடைமைகளை தானே எடுத்துச்சென்று பிற அதிகாரிகளுக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர். எந்த சூழ்நிலையிலும் நேர்மை தவறாமல் தனது கடமையை நிறைவேற்றி வந்தவர்.
அவர் காஞ்சிபுரம் ஆட்சியராக இளம் வயதில் பதவி வகித்தபோது ஆற்றிய பணிகள் குறித்து மூத்த செய்தியாளர்கள் ஜே.வி.நாதன் மற்றும் கருணாகரன் ஆகியோர் சொல்வதை கேட்டு வியந்து போனதுண்டு.
சமூக அக்கறை கொண்டவர். எளியோருடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காக அவர்களுடன் நெருங்கி பழகியவர். அதிகாரமிக்க பதவியில் இருந்தபோதும் கூட எந்தவித சாதாரண ஊழியர்கள் முதல் உயர் அதிகாரிகள் வரை, சாமானியர்கள் முதல் செல்வாக்கு மிக்கவர்கள் வரை என அத்தனை பேரிடமும் மிக சாதாரணமாக பழகி தனது பணிக்காலத்தை நிறைவு செய்துள்ளார்.
தனது பணிக்காலத்தில் நேர்மையாக செயல்பட்ட துப்புரவு பணியாளர்கள் முதல் ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் வரை என அத்தனை பேரையும் நேரில் வரவழைத்து அவர்களது நேர்மையை பாராட்டி பொன்னாடை அணிவித்து புத்தகங்களை பரிசாக வழங்கி உற்சாகமூட்டியவர்.
குறைகளை தீர்த்து வைத்தவர், சில நேரங்களில் மனுதாரர்கள் மனு கொடுத்துவிட்டு வீட்டுக்கு செல்வதற்குள் அவர்களுடைய குறைகளைத் தீர்த்து வைத்த பெருமைக்குரியவர்.
தலைமை செயலாளராக பொறுப்பேற்றதும் தான் இந்த பதவியில் இருக்கும் வரை தான் எழுதிய புத்தகங்களை அரசு நூலகங்களுக்கு வாங்கக்கூடாது என்றும், அரசு விழாக்களின்போது தான் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாக தரக்கூடாது என்றும் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்தவர்.
தொழில்நுட்ப வளர்ச்சியை சுட்டிக்காட்டி ஊராட்சி பகுதிகளில் தண்டோரா மூலம் தெரிவிக்கப்படும் அறிவிப்புகளுக்கு எதிராக கருத்துகள் வெளியானபோது, இனிமேல் தண்டோரா மூலம் எந்த அறிவிப்புகளும் மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்தார்.
சாதி பாகுபாடு காரணமாக சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினத்தில் ஊராட்சிகளில் அந்தந்த ஊராட்சி தலைவர்கள் கொடியேற்ற மறுக்கப்படுவதை அறிந்து இதுபோன்ற நாட்களில் ஊராட்சி தலைவர்கள் கொடியேற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்தவர்.
இவ்விதமான பெருமைக்கு சொந்தகாரராகிய ஐ.ஏ.எஸ். அதிகாரி இறையன்புவின் பணிக்காலம் மறக்க முடியாது, ஆனால் ஒரு மகிழ்ச்சி இனி அவரது எழுத்துலகம் விரிவடையும் என நம்பலாம், ஆகவே அவருக்கு வணக்கம் சொல்லி விடைகொடுப்போம்.
முன்னதாக, வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் வகையில் ஒவ்வொரு பள்ளியிலும் வாசிப்போர் மன்றம் ஏற்படுத்த வேண்டும் என்றும் அதில் மாதந்தோறும் மாணவர்கள் தாங்கள் படித்த புத்தகங்களைப் பற்றி பேசுவதற்கு வாய்ப்புகள் வழங்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இதன்மூலம் வாசிப்பு மேம்படுவதுடன் தகவல் தொடர்பிலும் மாணவர்கள் சிறந்து விளங்குவார்கள். சிறந்த முறையில் நூலை மதிப்புரை செய்யும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குவதோடு, இதில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் நல்ல புத்தகங்களை தந்து ஊக்குவிக்கலாம் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று தலைமைச் செயலகத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘ஓய்வுக்குப் பின் என்ன செய்யலாம் என்று இதுவரை சிந்திக்கவில்லை. முதலில் ஒரு மாதம் ஓய்வில் இருப்பேன். அதன் பின்னர், சமுதாயம் என்னை எப்படி பயன்படுத்த விரும்புகிறதோ, அதற்கேற்ப செயல்படுவேன். மாணவர்கள், இளைஞர்களின் முன்னேற்றம் குறித்து சிந்தித்து வருகிறேன்’என்றார்.
இன்று காலை தலைமைச்செயலகத்தில் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் தலைமைச்செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளை தெரிவித்ததோடு இனி இலக்கியப்பணியில் கூடுதலாக ஆர்வம் காட்டுங்கள் என்றார். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்துகளை பகிர்ந்தார். அதேபோல், சக பணியாளர்களின் வாழ்த்துகளை பெற்றுக்கொண்டு வருகின்றார் இறையன்பு.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.