டாஸ்மாக் மதுபான கடைகளில் விற்கபடும் தரமற்ற மற்றும் கலப்பட மது பானங்களை விற்பதை தடை செய்யுமாறு சென்னை ஐகோர்ட்டில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. மேலும் கலப்பட மது விற்பவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
இது தொடர்பாக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், ’’நான், என்னுடைய நண்பருடன் ’ஏன்சியன்ட் காஸ்க்' மற்றும் 'பெக்கார்டி' ரம்மை டாஸ்மாக் கடையில் வாங்கி அருந்தினேன்.
அதை அருந்திய எனக்கும் எனது நண்பருக்கும் வயிற்று வலி, வாந்தி , பேதி ஏற்பட்டது. இதனையடுத்து அந்த மது வகைகளை வாங்கி தஞ்சையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதனைக்கு உட்படுத்தினேன். அப்போது, அதில்
'டார்டாரிக் அமிலம்' அதிக அளவில் இருப்பது தெரியவந்தது.
அந்த ஆய்வறிக்கையை உணவு பாதுகாப்பு துறைக்கு அனுப்பியும் எந்த நடவடிக்கைநும் எடுக்கவில்லை. உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ் மதுபானம் இருக்கிறதா என்பது குறித்து தெளிவான குறிப்பு இல்லை. எனவே மதுபானங்களை சோதனை செய்ய முடியாத நிலை உள்ளது என உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆனால் இது தவறானது. மது வகைகள் இந்த சட்டத்தின் கீழ் தான் உள்ளது. எனவே டாஸ்மாக்கில் விற்கப்படும் மது வகைகளை சோதனை செய்ய உத்தரவிட வேண்டும்.
அதேபோல டாஸ்மாக் கடைகளுக்கு தரமற்ற மது மற்றும் கலப்பட மது வகைகளை உற்பத்தி, வினியோகம் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும். குறிப்பிட்ட கால இடைவெளியில் மதுபான கடைகளில் விற்கப்படும் மது பானங்களை ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்’’ என மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.