அரசு மருத்துவமனைகளில் கொரோனா வார்டில் பணியாற்றும் சுகாதார பணியாளர்களுக்கு கடந்த 20 மாதங்களாக வழங்கப்பட்ட ஹோட்டல் குவாரன்டைன் வசதி நேற்றுடன் முடிவுக்கு வந்துள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தபோது, மருத்துவர்கள் உட்பட அனைத்து சுகாதார பணியாளர்களும் தங்குவதற்காக தமிழகம் முழுவதும் தனியார் ஹோட்டலில் அறைகள் ஒதுக்கப்பட்டன. மருத்துவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டு, சுழற்சி முறையில் பணியில் ஈடுபட ஏற்பாடு செய்யப்பட்டன.
ஆனால், அண்மையில் ஹோட்டல் குவாரன்டைனில் தங்கவைக்கப்பட்டிருந்த சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களாக பணியாற்றி வரும் இரண்டு மருத்துவர்கள், அங்கியிருந்த 2 பெண் மருத்துவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைதானதை தொடர்ந்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் (டிஎம்இ) டாக்டர் ஆர் நாராயணபாபு, அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளின் டீன்களுக்கு எழுதிய கடிதத்தில், "கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதாலும், ஹோட்டலில் அரங்கேறும் தவறான சம்பவங்கள் காரணமாகவும், மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், செவிலியர்கள் மற்றும் இதர சுகாதாரப் பணியாளர்கள் என அனைவருக்கும் வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்குமிடம் வசதி நேற்றுடன்(நவம்பர்.21) திரும்ப பெறப்படுகிறது. கொரோனா பணியில் இருந்த அனைத்து சுகாதாரத் துறை ஊழியர்களுக்கும் இந்த வசதி மார்ச் 2020 முதல் வழங்கப்பட்டு வந்தது.
உடனடியாக சுகாதார துறை பணியாளர்கள் தங்கியிருக்கும் ஹோட்டல்களை கண்டறிந்து, அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவு, தங்குமிடம் வசதியை திரும்ப பெற்றது குறித்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் உரிமையாளர்களிடம் தெரிவிக்குமாறு டீன்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil