ஆன்லைன் சந்தையில் உடனடி தனிநபர் கடன்கள் வழங்கும் கடன் செயலிகள் ஏராளமாக கிடைக்கின்றன. இந்த செயலி மூலம் கடன்வாங்கும் தனிநபர்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படுவதோடு, தனிநபர் தகவல்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது.
இளம்பெண் ஒருவர் மொபைலில் வந்த ஆன்லைன் கடன் லிங்கை கிளிக் செய்ததால் தற்போது கடன் பெறாமலேயே கடன் பெற்றுள்ளதாக கூறி அவரது குடும்ப புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து கடனை திரும்ப செலுத்தக் கோரி மிரட்டல் விடுவதாக இளம்பெண் பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாதிக்கப்பட்ட அந்தப் பெண் கோவை துடியலுரைச் சேர்ந்த படுகர் இனத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவர் ஊட்டியை பூர்வீகமாகக் கொண்டவர். இவரது மொபைல் போனில் கடந்த சில நாட்களுக்கு முன் வாட்ஸ்அப் குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.
அதை என்னவென்று பார்ப்பதற்காக கிளிக் செய்துள்ளார். அதில் ஆன்லைன் மூலம் லோன் தருவதாக வந்துள்ளது. இதையடுத்து அந்த லிங்கை விட்டு வெளியே வந்துவிட்டார். இந்த நிலையில் சில நாட்கள் கழித்து ஒரு நம்பரில் இருந்து அழைப்பு வந்துள்ளது.
அதில் லோன் எடுத்துள்ளீர்கள் அதற்கான தொகையை கட்டுமாறு கூறியுள்ளனர். அவர்களிடம் நான் லோன் வாங்கவே இல்லை என தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் நீங்கள் லோன் வாங்கியுள்ளீர்கள் கட்டியே ஆகவேண்டும் என கூறியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட அப்பெண் முடியாது என கூறவே தொடர்ந்து போன் செய்து டார்ச்சர் செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து பெண்ணின் குடும்பத்தினர் புகைப்படங்களை இணையத்தில் இருந்து எடுத்து அதனை ஆபாச வீடியோவாக சித்தரித்து அவருக்கே அனுப்பி லோன் தொகையை கட்டவில்லை என்றால் அனைவருக்கு அனுப்பி விடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதையடுத்து இது குறித்து கோவை மாவட்ட சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துவிட்டு அப்பெண் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் தான் எவ்வாறு ஏமாந்தேன் என்றும் இனி யாரும் வாட்சப்பில் வரும் லிங்குகளை கிளிக் செய்யவேண்டாம் – அது போன்ற லிங்குகளை யாருக்கும் பார்வேட் செய்ய வேண்டாம், அது போல லிங்குகள் வந்தால் உடனடியாக அதை டெலிட் செய்யவும் என்னைப் போல் யாரும் கஷ்டப்படவேண்டாம் என கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் என கண்ணிர் மல்க படுகர் மொழியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆன்லைன் சந்தையில் உடனடி தனிநபர் கடன்கள் வழங்கும் கடன் செயலிகள் ஏராளமாக கிடைக்கின்றன. இந்த செயலி மூலம் கடன்வாங்கும் தனிநபர்களுக்கு அதிக வட்டி விதிக்கப்படுவதோடு, தனிநபர் தகவல்களுக்கும் பாதுகாப்பில்லாத நிலை நிலவுகிறது.
இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை செய்தியாளர் ரகுமான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“