red hills scooter accident : ஹெல்மெட் அணியாமல் சென்றதாக போலீஸார் தடுத்த போது லாரி மோதியதில் பெண்ணின் கால்கள் சக்கரத்தில் சிக்கி நசுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் ஹெல்மெட் சோதனையை காவல் துறையினர் அதிதீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் ஹெல்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும், இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹெல்மெட் சோதனையில் போது சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் இளம்பெண் ஒருவருக்கு நேர்ந்த விபத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பொன்னேரி அருகே உள்ள பாடியநல்லூரைச் சேர்ந்தவர் பிரியா. 23 வயதாகும் பிரியாவுக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைப்பெற்றது.
இந்நிலையில் பிரியா சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். செங்குன்றம் - திருவள்ளூர் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றபோது அங்கிருந்த ஊர்க்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் ஹெல்மெட் அணியாமல் சாலையைக் கடக்க முயன்ற பிரியாவின் இருசக்கர வாகனத்தை கம்பால் தடுத்துள்ளார்.
இதில் அவர் தடுமாறி கீழே விழ அந்த வழியாக வந்த லாரி ஒன்று அவர் கால் மீது ஏறியுள்ளது. இதனால் பிரியா வலியால் துடித்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக பிரியாவை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்துவரும் நிலையில், விபத்துக்கு காவலரே காரணம் எனக் கூறி அப்பகுதி மக்கள் செங்குன்றம் - திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரின் மோட்டார்சைக்கிளை தீ வைத்து எரித்ததுடன், விபத்துக்கு காரணமான லாரியின் கண்ணாடியை கல்வீசி நொறுக்கினர்.
இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் போலீஸார் தடியடி நடத்தி தலைத்தனர். இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 7 பேரை சோழவரம் போலீஸார் கைது செய்துள்ளனர்.