பெண் எஸ்.பி. அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தலைமுறைவாக உள்ள முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் வெளிநாடு தப்பிச்செல்லாமல் இருக்க, அனைத்து விமான நிலையங்களுக்கும் சிபிசிஐடி போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.
2021-ல் பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சட்டம்-ஒழுங்கு சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸுக்கு 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ.20,500 அபராதம் விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஜூன் 16-ல் தீர்ப்பளித்தது. மேலும், பாலியல் அத்துமீறல் தொடர்பாக புகார் கொடுக்கச் சென்ற பெண் எஸ்.பி.யை தடுத்து நிறுத்திய குற்றச்சாட்டில், அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி. கண்ணனுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.
தனக்கு விதிக்கப்பட்ட இந்த தண்டனையை நிறுத்தி வைக்க கோரியும், சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து மார்ச் 9ஆம் தேதி அவரை கைது செய்ய சிபிசிஐடி போலீஸார் சென்னை தையூர் கோமநகர் பகுதியில் உள்ள வீட்டுக்கச் சென்றபோதுதான், அவர் தலைமறைவானது தெரிய வந்தது.
சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்பாகவே அவர் சொந்த மாநிலமான ஒடிசாவிற்கு தப்பிச் சென்று விட்டதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் சார்பில் தனிப்படை ஒடிசா மாநிலத்திற்கு விரைந்துள்ளது.
மேலும் ராஜேஷ்தாஸ் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்வதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களுக்கு சிபிசிஐடி போலீஸார் சார்பில் லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
வருகின்ற 12 ஆம் தேதி அவரது வழக்கு நீதிமன்றத்தில் வர உள்ள நிலையில் அந்த வழக்கின் நீதி மன்ற உத்தரவுப்படி அடுத்தக்கட்ட நகர்கவுகள் இருக்கும் எனவும் சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“