காஞ்சிபுரம் அருகே இளம் பெண் ஒருவர் தனியார் தோட்டம் ஒன்றில் தூக்கிட்ட நிலையில் மர்மமாக இறந்து கிடந்தார். அந்த பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்து கொலை செய்ததாக அவரது காதலனை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரம் அருகே உள்ள ஆண்டி சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பூபதி என்பவரின் மகள் ரோஜா (19). இவர் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்துவந்துள்ளார். காஞ்சிபுரம் அருகே உள்ள காரை கிராமத்தைச் சேர்ந்த ஜே.சி.பி வாகன ஓட்டுநர் ராஜேஷ் என்பவரும் ரோஜாவும் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
ராஜேஷுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷுக்கும் அவரது மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விட்டு பிரிந்து சென்றுள்ளார்.
தனியாக இருந்து வந்த மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ராஜேஷும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ரோஜாவும் காதலித்து வந்தனர். இதனால், ரோஜா கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ரோஜா ராஜேஷிடம் தன்னை உடனடியாக திருமணம் செய்துகொள்ளும்படி வலியுறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ரோஜா அவருடைய வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவரது குடும்பத்தினர் ரோஜாவை காணவில்லை என பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதையடுத்து, ரோஜாவின் குடும்பத்தினர் ராஜேஷ் வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர். ராஜேஷ் ரோஜாவின் உறவினர் வீட்டுக்கு போன் செய்து ரோஜா தன்னுடன் இருப்பதாகவும் அவரை தான் என்ன வேண்டுமானாலும் செய்வேன் என்று அச்சுறுத்தியதாக ரோஜாவின் உறவினர்கள் கூறுகின்றனர்.
இந்த நிலையில்தான், ரோஜா காஞ்சிபுரம் அருகே உள்ள பரந்தூர் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்தில் தூக்கிட்ட நிலையில் சடலமாக காணப்பட்டார். இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ரோஜாவின் சடலத்தைப் பார்த்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ரோஜாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர். மேலும், ரோஜாவின் உடல் முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்ட காயங்கள் இருப்பதால் அவர் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தலித் பெண் ரோஜா மரணம் தொடர்பாக ராஜேஷ் மீது கொலை வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்ய வலியுறுத்தி ரோஜாவின் உறவினர்களுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ரோஜாவின் மரணத்தில் உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, ரோஜா மரணத்துக்காக நீதி கேட்டு டுவிட்டர், ஃபேஸ்புக் ஆகிய சமூக ஊடகங்களில் பலரும் செய்தியை பகிர்ந்ததால் டுவிட்டரில் #JusticeForRoja kancheepuram murder என்பது பரவலானது.
ரோஜா மரணம் குறித்து காஞ்சிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்தபிறகே மரணத்துக்கான தெரிய வரும் என்று காவல் துறை வட்டாரங்கள் கூறுகின்றன.