சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த 23 வயது பெண் ஒருவர், கடந்த 2015-ம் ஆண்டு, தனது ஆண் நண்பருடன் காரைக்குடியை அடுத்துள்ள ஆவுடையப்பொய்கை அருகே நின்று பேசிக் கொண்டிருந்துள்ளார்.
அப்போது, அங்கு வந்த கீழையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சாத்தையா மற்றும் கொரட்டி கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுனன் ஆகிய இருவரும் தாங்கள் காவலர்கள் எனக் கூறிக் கொண்டதுடன் பெண்ணை விசாரணைக்கு அழைத்து செல்வதாக கூறி அருகில் இருந்த முந்திரி காட்டிற்குள் அழைத்துச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனை அடுத்து பாதிக்கப்பட்ட பெண் காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே சாத்தையா, அர்ஜுனன் ஆகிய இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.
அந்த வழக்கானது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மகிளா சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் குற்றம் சாட்டப்பட்ட இருவர் மீதும் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில் இன்று இருவருக்கும் நீதிபதி கோகுல் முருகன் வாழ்நாள் ஆயுள் தண்டனை விதித்ததுடன் தலா ரூ. 46 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி தீர்ப்பை வழங்கினார்.
பெண்ணை காவலர் எனக்கூறி கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“