கணவரிடம் சேர்த்து வைப்பதாகக் கூறி, தன்னை பாலியல் ரீதியாகவும், பணம் வாங்கிக் கொண்டும் ஏமாற்றிவிட்டதாக மதுரையில் பெண் போலீஸ் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
மதுரை தல்லாகுளம் ஸ்டேஷனில் ஏட்டாக வேலைப்பார்க்கும் பெண் போலீஸ் ஒருவருக்கு திருமணமாகி ஒரு பெண், ஒரு ஆண் என 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் தம்பதிக்குள் பிரச்சனை ஏற்பட்டு 9 வருடமாக பிரிந்து வாழ்கிறார்கள். கணவர் தரப்பில் டைவர்ஸ் கேட்டு பெண் போலீசுக்கு நோட்டீஸ் வந்துள்ளது.
இந்த சமயத்தில் வேறொரு நபர் ஒருவர் அப்பெண் போலீசுக்கு அறிமுகமாகி உள்ளார். அவர், கணவரிடம் எப்படியாவது சேர்த்து வைப்பதாக சொல்லி ஒன்றரை லட்சம் ரூபாய் வரை வாங்கியிருப்பதாக பெண் போலீஸ் தனது புகாரில் குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும் கணவருடன் சேர்த்து வைக்க, கேரளா சாமியார் ஒருவரை வரவழைத்து வசியம் செய்து அதன் மூலம் கணவரை அவருடன் சேர்த்து வைப்பதாக சொல்லி, இதற்காக கணவரின் சட்டை, அவரது காலடி மண், 50 ஆயிரம் பணத்துடன் வருமாறு சொல்லி இருக்கிறார்.
அந்த பெண் போலீஸும் இவை எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துக் கொண்டு அவர்கள் சொன்ன இடத்திற்கு செல்ல, சாமியார் ஒருவித மை போன்ற பொருளை அவர் மீது தடவியதாகவும், அதன் பிறகு அவர் மயக்கமடைந்து விட்டதாகவும், சிறிது நேரத்து கழித்து சுயநினைவு வந்த போது, அவரது ஆடை கலைந்த நிலையில், பாலியல் ரீதியான துன்பம் நடைபெற்றதை உணர்ந்து அதிர்ச்சி அடைந்ததாக புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 'இது சம்பந்தமாக வெளியே சொன்னால் கஞ்சா வியாபாரிகளை வைத்து சீரழித்து விடுவேன் என்று மிரட்டுகிறார். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, மனுவை பெற்றுக்கொண்ட மாநகர போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், இது குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார். தல்லாகுளம் இன்ஸ்பெக்டர் மலைச்சாமி , சாமியார் உள்பட 4 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.