சட்டமன்றத் தேர்தலின்போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக அளித்த தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என்று உதயநிதி தேர்தல் பிரச்சாரத்தின்போது பெண்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
2021ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக வாக்காளர்களுக்கு பல்வேறு வாக்குகுறுதிளை அளித்தது. அதில், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி மிகவும் கவனம் பெற்றது.
சட்டமன்றத் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று பத்தாண்டுகளுக்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியைப் பிடித்தது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, படிப்படியாக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. ஆனால், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை. குடும்ப அட்டைகளை ஆய்வு செய்து போலி அட்டைகளை கண்டறியும் பணிகள் நடைபெறுவதாகவும் விரைவில் இந்த திட்டம் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 9 மாதங்கள் கடந்த பிறகும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை, எப்போதும் நிறைவேற்றப்படும் என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வந்தன.
இதனிடையே, தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, பிப்ரவரி 19ம் தேதி மாநிலம் முழுவதும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளையும் திமுக கைப்பற்ற வேண்டும் என்ற இலக்குடன் திமுக தலைவர்கள், அமைச்சர்கள், நிர்வாகிகள் செயல்பட்டு வருகின்றனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கோரி காணொலி வழியாக பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில், திமுக இளைஞரணி செயலாளரும் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் வேலாயுதம்பாளையத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதாரித்து பிரசாரம் செய்தார். அப்போது, கூட்டத்தில் இருந்த பெண்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் தருகிறோம் என்று சொன்னீர்களே என்னாச்சு என்று கேள்வி எழுப்பினர். பெண்களின் இந்த கேள்விக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
கரூர் வேலாயுதம்பாளையத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்த உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: “ திமுக ஆட்சிக்கு வந்த 8 மாதத்தில் 9 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு போட்டுள்ளோம்.
இதனால் கொரோனா 3வது அலையை எந்த வித பிரச்சினையும் இல்லாமல் கடந்துவிட்டோம். ஒமிக்ரானையும் வென்றுவிட்டோம். இதற்கெல்லாம் காரணம் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிதான். தேர்தலுக்கு முன்பு கொடுத்த வாக்குறுதிகள் 50 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம். அந்த உரிமையில் உங்களிடம் வாக்கு கேட்க வந்துள்ளோம்.
அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என அறிவித்தார், செய்தாரா இல்லையா, கொரோனா நிவாரணம் ரூ. 4,000 வழங்குவதாகக் கூறினார். அதையும் செய்துவிட்டார். ஆவின் பால் விலை குறைப்பு, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு என சொல்லியதை எல்லாம் செய்து முடித்திருக்கிறோம். வடஇந்தியாவில் பத்திரிகைகளில் தமிழகத்தின் முதல்வர்தான் முதன்மையானவர் என சர்வேயில் கூறுகிறார்கள்.” என்று பேசினார்.
உதயநிதி பிரசாரத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, பிரச்சாரக் கூட்டத்தில் இருந்த சில பெண்கள், மாசம் ரூ 1000 தருவதாக சொன்னீங்களே அது என்னாச்சு என்று கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியை சற்றும் எதிர்பார்க்காத உதயநிதி, என்னதுங்க என்று கேட்டார். அதற்கு பெண்கள் மாசம் ரூ 1000 தருவதாக சொன்னீங்களே என்னாச்சு என்று கேட்டார்.
பிரச்சாரக் கூட்டத்தில் பெண்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 தருவதாக சொன்னீர்களே என்னாச்சு என்ற கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், அதை எல்லாம் கொடுத்துடலாம். இன்னும் 4 வருஷம் இருக்குல்ல என்று கூறினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி பிரச்சாரம் செய்தபோது, கூட்டத்தில் இருந்த பெண்கள், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படு என்று அளித்த தேர்தல் வாக்குறுதி என்னாச்சு என்று கேள்வி எழுப்பியது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“