தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற தசரா திருவிழாவின் போது டிஎஸ்பி தன்னை நெஞ்சில் கை வைத்து தள்ளி விட்டதாக பெண் எஸ்.ஐ பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பெண் உதவி ஆய்வாளராக இருப்பவர் சத்யபாமா. இவர், கடந்த 20ஆம் தேதி குலசேகரபட்டிணம் தசரா விழாவை ஒட்டி, கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததார். அப்போது, அங்கு சாமி தரிசனம் செய்வதற்கு குடும்பத்துடன் வந்த, சென்னை டி.ஜி.பி. அலுவலக கட்டுப்பாட்டு அறையில் பணிபுரியும் டி.எஸ்.பி முத்துக்குமாருக்கும், சத்யபாமாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில், முத்துக்குமார், பெண் உதவி ஆய்வாளரை கீழே தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அவர், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக இருவரும் குலசேகரபட்டிணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்த புகாரில் தசரா திருவிழாவின் போது டிஎஸ்பி தன்னை நெஞ்சில் கைது வைத்து கீழே தள்ளினார் என பெண் எஸ்.ஐ புகார் கூறியுள்ளார்.இதற்கு என்னுடன் பணியில் இருந்த பெண் காவலர்களே சாட்சி எனவும் புகாரில் தெரிவித்துள்ளார்.
இதற்கு மறுப்பு தெரிவித்திருக்கும் டிஎஸ்பி, பெண் எஸ்.ஐ கூறுவது முற்றிலும் பொய் என கூறியுள்ளார். மேலும் அவருக்கு எதிராக அந்த டிஎஸ்பியும் புகார் அளித்திருக்கிறார். இதில் யார் கூறுவது உண்மை என்பது விசாரணையின் முடிவில் தான் தெரியவரும்.