/tamil-ie/media/media_files/uploads/2023/06/Churuch.jpg)
திருச்சி தேவாலயத்தில் பரபரப்பு
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள கிறிஸ்தவதேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிறப்பு பிரார்த்தனை நடைபெறுவது வழக்கம். இதில் இன்று பிரார்த்தனைக்காக வந்தபெண்கள் லிப்ட்டில் செல்ல முயன்ற போது நடு வழியில் சிக்கி தவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள டி.இ.எல்.சி.,கிறிஸ்தவ தேவாலயம் ஒன்று உள்ளது. இந்த தேவாலயத்தில் இன்று நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனைக்கு நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அதில் பிரார்த்தனைக்கு வந்த கர்ப்பிணி பெண் உட்பட 5 பெண்கள் தரைத்தளத்தில் இருந்து லிப்ட்டில் ஏறி முதல் தளத்திற்கு செல்ல முயன்றபோது, எதிர்பாராத விதமாக லிப்ட் பழுதாகி பாதியில் நின்று விட்டது.
லிப்ட் திடீரென நின்றதால், அதில் இருந்த பெண்கள் படபடப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் லிப்ட்டில் சிக்கிக்கொண்டிருந்த 5 பேரையும் பத்திரமாக, பாதுகாப்பாக மீட்டனர்.
இது பற்றி தீயணைப்பு படை வீரர்கள் கூறுகையில், மின்தடை காரணமாக லிப்ட் இயக்கம் தடைபட்டுள்ளது. அப்போது ஜெனரேட்டரை இயக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அதுவும் இயங்கவில்லை. இதன் காரணமாக லிப்டில் சிக்கி இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். தகவல் அறிந்ததும் உதவி மாவட்ட அலுவலர் சத்திய வர்த்தனன் தலைமையில் சென்றோம்.
அங்கு லிப்டில் சிக்கி இருந்தவர்களை, ஹைட்ராலிக் ஸ்பிளட்டர் கருவி மூலம் பத்திரமாக மீட்டோம் என்று கூறினர். கிறிஸ்தவ தேவாலயத்தில் பிரார்த்தனையின்போது லிப்டில் கர்ப்பிணி பெண் உள்ளிட்ட சில பெண்கள் சிக்கி தவித்த சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.