சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் குற்றவாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துள்ளது.
சென்னை ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றியவர் மாணிக்கம். இவருடைய மகள் சத்யபிரியா. அதே பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் தயாளனின் மகன் சதீஷ் (23). இவர் சத்யபிரியாவை ஒரு தலையாக காதலித்து வந்ததாக தெரிகிறது. இதனால், சத்யாவை நேரில் சந்தித்து தன்னை காதலிக்குமாறு சதீஷ் அவ்வப்போது தொந்தரவு செய்து வந்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபர் 13-ம் தேதி கல்லூரிக்குச் செல்ல சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்த சத்யபிரியாவிடம் தன்னை காதலிக்குமாறு சதீஷ் வற்புறுத்தியுள்ளார். சத்யபிரியா மறுப்பு தெரிவித்ததால், கோபம் அடைந்த சதீஷ், அங்கே வேகமாக வந்த ரயில் முன் சத்யபிரியாவை தள்ளிவிட்டார். இதில் சத்யபிரியா உயிரிழந்தார். தனது மகள் இறந்த துயரத்தை ஏற்க முடியாத மாணிக்கம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த பெண்ணின் தாய் வரலட்சுமி புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டு வந்தார்.
இந்த வழக்கில் சதீஷ் கைது செய்யப்பட்டார். சத்யபிரியாவை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த வழக்கில், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்தனர். சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை சென்னை அல்லிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஸ்ரீதேவி விசாரித்தார். சி.பி.சி.ஐ.டி தரப்பில் 70 சாட்சிகள் விசாரணை செய்யப்பட்டனர். அனைத்து விசாரணையும் நிறைவடைந்ததை அடுத்து, இந்த வழக்கில் டிசம்பர் 27-ம் தேதி சதீஷ் குற்றவாளி என நீதிபதி ஸ்ரீதேவி தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில், குற்றவாளி என உறுதி செய்யப்பட்ட சதீஷுக்கான தண்டனை விவரங்கள் இன்று அறிவிக்கப்படுவதாக சொல்லப்பட்டது. அதன்படி, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 30) மதியம் தண்டனை விவரங்கள் விவரங்கள் அறிவிக்கப்பட்டன. அதில், கொலையாளி சதீஷுக்கு மரண தண்டனை விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீண்ட நாட்கள் கழித்து இப்படியொரு வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“