சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) பிரதமர் மோடி குறித்த பி.பி.சியின் ஆவணப்படம் இன்று திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
பிரிட்டிஷ் ப்ராட்காஸ்டிங் கார்ப்பரேஷன் (பி.பி.சி) சமீபத்தில் ‘இந்தியா: மோடி கேள்விகள்’ ( ‘India: The Modi Question’) என்ற ஆவணப்படத்தை வெளியிட்ட பிறகு அந்த நிறுவனம் இந்தியாவில் பேசு பொருளாகியுள்ளது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் அதை தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தில் பொதுமக்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். இந்த கலவரத்தில் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பிரிட்டிஷ் விசாரணைக் குழு விசாரணை மேற்கொண்டது.
இந்த விசாரணை அறிக்கையை மையமாக கொண்டு ‘இந்தியா: மோடி கேள்விகள்’என்ற ஆவணப்படத்தை பி.பி.சி இயக்கியது. கலவரத்தின் போது முதல்வராக இருந்த பிரதமர் மோடி மற்றும் அவரது அரசு கலவரத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கவில்லை என பிரிட்டிஷ் விசாரணைக்குழு குற்றம்சாட்டியிருப்பதாக அந்த ஆவணப்படத்தில் கூறப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படத்தை பி.பி.சி வெளியிட்டது ஆனால் இந்தியாவில் வெளியாகவில்லை. இருப்பினும் இந்த ஆவணப்படத்தின் லிங்குக்கள் சமூகவலைதளங்களில் வெளியானது.
இதையடுத்து, மத்திய அரசு இந்த ஆவணப்படத்தின் லிங்குகளை முடக்கி நீக்க உத்தரவிட்டது. இந்த ஆவணப்படம் உண்மைக்கு புறம்பானது மற்றும் அரசுக்கு எதிரான பிரச்சாரப் படம் எனக் குற்றஞ்சாட்டியது. இந்தநிலையில், பல்வேறு உயர்கல்வி நிலையங்களில் மாணவர் அமைப்பினர் பி.பி.சி ஆவணப்படத்தை திரையிடுவதாக அறிவித்தனர்.
டெல்லி ஜே.என்.யு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம், கேரளாவில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் மாணவர்கள் ஆவணப்படத்தை திரையிட முயன்றனர். ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் இவ்விவகாரத்தில் இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் மாணவர்கள் தங்களது செல்போன், லேப்டாப்களில் படம் பார்த்தனர்.
இந்தநிலையில், சென்னை பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI)‘இந்தியா: மோடி கேள்விகள்’ ஆவணப்படத்தை இன்று திரையிடுவதாக அறிவித்திருந்தனர். இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகம் ஆவணப்படத்தை திரையிட அனுமதி இல்லை என அறிவித்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.