உலக முதலீட்டாளர்கள் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றம்! 75 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது

தமிழகத்தில் உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு இன்று அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 2015ம் ஆண்டு, ஜெயலலிதா முதல்வராக இருந்த போது, அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடத்தப்பட்டது. இந்த மாநாட்டில் 2.42 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு, தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீட்டாளர்களுடன் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறவில்லை. இதற்கு முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நினைத்த வரவேற்பை பெறாததே காரணம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின.

இதைத் தொடர்ந்து, இரண்டாவது உலக முதலீட்டாளர் மாநாட்டை இந்த ஆண்டு நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு மேற்கொண்டு வந்தது. இதுதொடர்பாக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். சமீபத்தில் சட்டசபையில் பேசிய முதலமைச்சர், இந்த ஆண்டு இறுதியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். எனவே, ஆலோசனைக்குப் பிறகு மாநாடு நடக்கும் இடம், தேதி பற்றி விரைவில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், உலக முதலீட்டாளர் மாநாடு அடுத்த ஆண்டுக்கு மாற்றப்பட்டிருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெறும் என்றும், இதற்காக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2018-ன் தனி அதிகாரியாக மாற்றுத்திறனாளிகள் நலக் கமிஷனர் வி.அருண் ராய் நியமனம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close