scorecardresearch

சென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு! துணை ஜனாதிபதி பங்கேற்பு

ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது

சென்னையில் தொடங்கும் உலக முதலீட்டாளர்கள் மாநாடு! துணை ஜனாதிபதி பங்கேற்பு

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நாளை தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

நாளை (ஜன.23) காலை 10 மணிக்கு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தொடங்கி வைக்கிறார். தமிழக வானூர்தி மற்றும் பாதுகாப்பு துறை கொள்கை 2019ஐ மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிடுகிறார். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தொழில் துறை செயலாளர் ஞானதேசிகன் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்.

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை ஒட்டி 250க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் தொழில் பொருட்காட்சியும் நடக்கிறது. அதில், பல்வேறு தொழில் சார்ந்த நிறுவனங்கள் தங்களின் புதிய, பழைய தயாரிப்புகள் குறித்து பார்வைக்கு வைக்க உள்ளன. நாளை தொடக்க விழா நிகழ்ச்சி முடிந்ததும், ஆட்டோமொபைல் துறை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, விண்வெளி மற்றும் ராணுவ தளவாட தொழிற்சாலைகள் குறித்து முதலீட்டாளர்கள் கருத்தரங்கும் நடக்கிறது. மதியம் 2 மணி அளவில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், கொரியா நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கு நடக்கிறது.

துணை ஜனாதிபதி பங்கேற்பு

இதைத் தொடந்து 2வது நாள் மாநாடு நாளை மறுதினம் (24ம் தேதி) காலை 10 மணிக்கு சிறு,குறு தொழில் முதலீட்டாளர்கள் கருத்தரங்குடன் தொடங்குகிறது. மாநாட்டில் ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

வரும் 24ம் தேதி மாலை 3 மணிக்கு நிறைவு விழா நடக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு நிறைவு உரை ஆற்றுகிறார். மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகிறார்.

பின்னர் தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது சுமார் 2 லட்சத்து 50 ஆயிரம் கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2 நாள் விழாவுக்கான ஏற்பாடுகளை தமிழக தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

வழக்கு ஒத்திவைப்பு

இதற்கிடையே, இந்த மாநாடு தொடர்பாக சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில், ஏமாற்றும் நிறுவனங்களிடம் இருந்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், விதிகளை வகுக்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இவ்வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, கடந்த மாநாட்டின்போது ஒப்பந்தம் செய்த சில நிறுவனங்கள் முதலீடு செய்யாததால் இழப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தனியார் நிறுவனங்களின் பின்னணி குறித்து ஆராய விதிகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு, உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் ரூ.2.55 லட்சம் கோடிக்கு முதலீட்டை ஈர்க்க முடியும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது குறுக்கிட்ட நீதிபதி, தமிழகத்தில் ஆக்கிரமிப்பு அகற்றப்படாத நிலையில், நிறுவனங்களுக்கு எப்படி நிலம் ஒதுக்கப்படும்? என கேள்வி எழுப்பி, வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: World investors summit 2019 starts tomorrow