scorecardresearch

உலக சிட்டுக் குருவி தினம் : சிட்டுக் குருவிகளைக் காக்க கூடு கட்டி வரும் குடும்பம்

நாளுக்கு நாள் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏனென்றால் அவற்றின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்து வருகிறோம்

sparrow nest
சிட்டுக்குருவி

மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக் குருவி தினம் [World Sparrow Day] கொண்டாடப்படும் நிலையில், திருச்சியில் ஒரு குடும்பம் சிட்டுக்குருவிக்கு கூடு கட்டி வருகின்றனர்.

திருச்சி புத்தூர் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகாசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார், சட்டப் படிப்பை படித்து வரும் கீர்த்தனா உள்ளிட்டோர் சிட்டுக் குருவிகளைப் பாதுகாக்கும் நோக்கத்துடன் தேங்காய் நார், மண் கலயம், தேங்காய் ஓடு உள்ளிட்டவற்றில் கூடு அமைத்து உணவு மற்றும் குடிநீர் வைத்து பராமரித்து வருகின்றனர்.

சிட்டுக் குருவிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் இது பற்றி கூறுகையில்,

நாளுக்கு நாள் சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஏனென்றால் அவற்றின் வாழ்விடங்களை மனிதர்கள் ஆக்கிரமித்து வருகிறோம். உலகம் பல் உயிர்களுக்கு உரித்தானது. ஆனால்  நகர்ப்புறங்களில் மரங்களை அழித்து அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி வருகிறோம். இதனால் குருவிகள் இயற்கையாக தங்கக்கூடிய வாழ்விடங்களை அழித்து வருகிறோம். மனிதர்களோடு நட்பாக பழகக்கூடிய சிட்டுக்குருவி இனம் வீட்டின் தாழ்வாரங்களிலேயே கூடுகட்டி வாழும் இயல்புடையது.

ஒவ்வொருவரும் அவரவர் வீட்டின் முன்பே அட்டைப்பெட்டியில், மண் கலயத்திலோ கூட கூடுகள் அமைத்து குருவிக்குரிய சிறுதானியங்களை வைத்தால் நாளடைவில் குருவிகள் வர துவங்கும். இனப்பெருக்க காலங்களில் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும். சிட்டுக்குருவிகளுக்கு செளகரியமாக இருக்கும் வகையில் எங்கள் இல்லத்திலேயே கூடு அமைத்து பராமரித்து வருகிறோம். மேலும் தன்னார்வமாக பராமரிக்கக் கூடியவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி சிட்டுக்குருவிகளுக்கு கூடு அமைக்கும் வழிமுறைகளை எடுத்துரைத்து வருகிறோம்.

இளம் தலைமுறையினரிடம் சிட்டுக்குருவிகளுக்கான கூடுகளை விநியோகம் செய்து வருகிறோம்.  கூட்டினை சிட்டுக்குருவிகள் தேடி வரும் வகையில்,  வீட்டின் தாழ்வார மேற்பகுதியிலோ அல்லது அருகில் இருக்கும் உயரமான மேற்கூரைப் பகுதிகளிலோ போதுமான குடிநீர் மற்றும் சிறுதானிய தீவனத்துடன் வைக்க வேண்டும். நாளடைவில் சிட்டுக்குருவிகளின் வசிப்பிடமாக மாறிவிடும் என்றார்.

க.சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: World sparrow day trichy family make sparrow nest