தமிழக சட்டபேரவையில் இன்று நடந்த விவாதத்தின் போது, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்தப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழ் வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் அறிக்கையை வாசித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் எம்ஜிஆர் பெயரில் கலை, சமூக ஆய்வியல் இருக்கை ஏற்படுத்தப்படும் என்றார். தொடர்ந்து அவர் வெளியிட்ட அறிக்கையில், இதற்காக ரூ.1 கோடி வைப்புத் தொகை வழங்கப்படும். லண்டன் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், தென் ஆப்பிரிக்காவின் ஜோகனஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவின் மலேயா பல்கலைக்கழகம், மற்றும் இலங்கை யாழ்பாணம் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைகள் நிறுவப்படும்.
உலக நாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள தமிழ் அமைப்புகள் ஒருங்கிணைந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்தப்படும்.
சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் வகையில், அதில் பங்கேற்கும் வீரர்களுக்கு மானியமாக தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். மேலும் ரூ.10 கோடி செலவில் இறகு பந்து அகாடமி அமைக்கப்படும். வேலூரில் ரூ.17.30 கோடி செலவில் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட உள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.30 கோடியில் பக்தர்கள் தங்கும் விடுதி கட்டப்படும். மேலும் கிராமப்புறங்களில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள நிதிவசதி இல்லாத 1000 திருக்கோயில்கள் புதுப்பிக்கப்படும். ஆயிரம் கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஒரு கோயிலுக்கு 1 லட்சம் வீதம் ரூபாய் வீதம் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும். மேலும் அதிவிரைவு படைக்கு தேவையான வாக்கி டாக்கி உள்ளிட்ட உபகரணங்கள் வாங்கப்படும் என்றும் தடைய அறிவியல் துறைக்கு எளிய நுண்ணோக்கி உள்ளிட்ட பொருட்கள் வாங்கப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி தனது உரையில் குறிப்பிட்டார்.