தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை 3ம் ஆண்டாக மாபெரும் அயலகத் தமிழர் தின விழாவை சென்னையில் நடத்துகிறது.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நேற்றும் இன்றும் நடந்த இந்த விழாவில் இலங்கை, மலேசியா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், துபாய், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இன்றைய நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் அயலகத் தமிழர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "எனக்கு உடல் நலமில்லை, உற்சாகமில்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுந்தியிருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கும்போது அதைவிட வேறு என்ன வேண்டும் எனக்கு. அதைவிட எனக்கு வேறு என்ன குறை இருக்க போகிறது.
நேற்று ஒரு பெண்மணி மகளிர் உதவித்தொகை, பொங்கல் பரிசு, வெள்ள நிவாரணத் தொகை என ஒரு மாதத்தில் ரூ.8 ஆயிரம் அரசு கொடுத்ததை சந்தோஷமாக கூறினார்.
அவர் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சி தான் எனக்கான உற்சாகம். எனக்கு மக்களை பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர என்னைப் பற்றி இருந்ததில்லை. எந்த சூழலிலும் மக்களோடு இருப்பவன் நான். எனது சக்தியை மீறி உழைப்பவன் நான். எனவே இதுபோன்ற செய்திகளை ஒதுக்கிவிட்டு மக்களுக்காக உழைப்பேன்", இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“