சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்.. அடையாளங்களை மறைக்கின்றனர்.. தமிழிசை | Indian Express Tamil

சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்.. அடையாளங்களை மறைக்கின்றனர்.. தமிழிசை

தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம். இந்து அடையாளத்தினை சிலர் மறைக்க முற்படுகின்றனர் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் தெரிவித்தார்.

சைவம், வைணவமும் இந்து மதத்தின் அடையாளம்.. அடையாளங்களை மறைக்கின்றனர்.. தமிழிசை

கோவை அவனாசிலிங்கம் மகளிர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் விமானம் மூலம் இன்று (அக்டோபர் 6) காலை கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “புதுச்சேரி மாநிலம் வெளிச்சமாகதான் இருக்கிறது. இருளில் மூழ்கவில்லை. 4 மணி நேரம் மட்டுமே மின்சாரம் இல்லாமல் பாதிப்பு ஏற்பட்டது. சிலர் செய்த பிரச்சினையால் மின் தடை ஏற்பட்ட நிலையில், மாற்று நடவடிக்கை எடுத்து சரி செய்யப்பட்டது.

மின் ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றது மகிழ்ச்சி. மின்துறை தனியார் மயமாக்கல் என்றதும் மின்துறையை முழுவதுமாக கொடு்த்துவிடுவதாக சிலர் நினைத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். ஆனால் அப்படி இல்லை இதனால் பொது மக்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். பல துணைநிலை மாநிலங்களில் மின்துறை தனியாருக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால் மக்களுக்கு பலன் இருக்கும், மின்கட்டணம் குறைக்கப்படும்.

மின் ஊழியர்கள், அதிகாரிகளின் பணி எந்த விதத்திலும் பாதிக்கப்படாது. ஒரு சாராருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என அரசுக்கு எண்ணம் கிடையாது. மக்கள் நலன் சார்ந்து எடுக்கப்பட்ட முடிவுதான் இது. இந்த திட்டத்தின் மூலம் மின் திருட்டு தடுக்கப்படும் என்பதால் சிலர் இந்த போராட்டங்களை தூண்டி இருக்கலாம்” என்றார்.

“மின்துறை ஊழியர்கள், அதிகாரிகள் பணியிலோ, பதவி உயர்விலோ எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தொடர்பான முடிவுகள், முதல்வருடன் பேசித்தான் எடுக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சொன்னது கூட பொதுமக்கள் பாதிக்க கூடாது என்பதற்காகதான். இதை ஊழியர், அதிகாரிகள் புரிந்து கொண்டு இருப்பார்கள். புதுவை இப்போது நன்றாக இருக்கிறது என்று கூறினார்.

புதுவை மாடல் இனி உயர்ந்த மாடலாக இருக்க போகிறது. மாடல் என்பதை விட புதுவை மாதிரி என்றுதான் சொல்ல வேண்டும். புதுமை மாதிரியாக இருக்கும். பல நிகழ்வுகள் நடக்க இருக்கிறது, இதை மக்கள் உணர்வார்கள். மின்தடை பிரச்சினையால் சுற்றுலா பயணிகள் மத்தியில் அச்சம் ஏற்பட்டது உண்மை என்றாலும், உடனடியாக பிரச்சினை சரி செய்யப்பட்டது. மீண்டும்
மின் ஊழியர்களின் போராட்டம் நடத்தப்படுமா என இனிதான் பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

தொடர்ந்து, ராஜ ராஜ சோழன் குறித்து இயக்குநர் வெற்றிமாறன் சொன்ன இந்து தொடர்பான கருத்துக்கு கமல்ஹாசன் ஆதரவு கொடுத்து இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, இதற்கு சிரிப்பதா? என்ன செய்வது? என தெரியவில்லை. தஞ்சை பெரியகோவிலை பார்த்து வளர்ந்தவள் நான். இதில் அடையாளங்களை மறைக்க பார்க்கின்றனர். கலாச்சார அடையாளங்களை மறைப்பதை எதிர்த்து எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும். தமிழகத்தில் பல அடையாளங்கள் ஏற்கனவே மறைக்கபட்டு இருக்கிறது.

இந்து கலாச்சார அடையாளத்தை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தினால் அதை ஏற்று கொள்ள முடியாது. தமிழர்களின் அடையாளம் இறை வழிபாடு. சைவம்,வைணவமும் இந்து மதத்தின் அடையாளம். அடையாளங்களை மறைக்க முற்படுகின்றனர். அடையாளங்களை மறைக்க முற்பட்டால் அதுசரியாக இருக்காது” என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Worship saivam and vainavam are the cultural identity of tamils says governor tamilisai

Best of Express