கன்னியாகுமரி பார்வதிபுரத்தில் தன்னை தாக்கிய கடைக்காரர் செல்வம், கிரிமினல் பின்னணி கொண்டவர் என்று எழுத்தாளர் ஜெயமோகன் கூறியுள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலையடுத்த பார்வதிபுரத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தமிழ் மற்றும் மலையாளம் மொழியிலான இவரது படைப்புகள் இந்தியா முழுவதும் பிரபலம். இவரின் படைப்புகளுக்கு என்று தனி ரசிகர் கூட்டமே உண்டு. எழுத்து உலகில் மட்டுமல்லாது திரையுலகிலும் ஜெயமோகனின் பங்கு அளப்பரியது.
கஸ்தூரி மான், நான் கடவுள், அங்காடி தெரு, நீர்ப்பறவை, கடல், 6 மெழுகுவர்த்திகள், காவியத்தலைவன், பாபநாசம், ஏமாளி, 2.0, சர்கார், விரைவில் வெளிவர உள்ள இந்தியன் 2 படம் வரைக்கும், ஜெயமோகனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.
பார்வதிபுரம் நேசமணி நகர் பகுதியில் உள்ள கடையிலிருந்து நேற்று ( ஜூன் 14ம் தேதி), ஜெயமோகன் தோசை மாவு வாங்கிவந்தார். அது காலாவதியாகிவிட்டதாக மனைவி கூறியதையடுத்து, மீண்டும் கடைக்கு சென்று அந்த மாவு பாக்கெட்டை திருப்பியளித்துள்ளார். கடைக்காரரின் மனைவி, மாவு பாக்கெட்டை திரும்ப வாங்காமல், நல்ல மாவு தான் என்று தொடர்ந்து கூறிவந்துள்ளார். இதனால் கடுப்பான ஜெயமோகன், மாவு பாக்கெட்டை அங்கேயே போட்டு விடுகிறார்.
இந்நிலையில், கடைக்கு வரும் கடைக்காரர் செல்வம் உள்ளிட்ட சிலர், தனது மனைவியுடன் வாக்குவாதம் செய்ததாக ஜெயமோகனை கடுமையாக தாக்குகின்றனர். அதொடு நிற்காமல்ல, ஜெயமோகனின் வீட்டிற்கும் சென்று தாக்குதல் நடத்துகின்றனர். இதிங் ஜெயமோகனின் வாய் உள்ளிட்ட பகுதிகளில் காயம் ஏற்பட்டது. ஜெயமோகன், சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இதுதொடர்பாக, ஜெயமோகன், பார்வதிபுரம் நேசமணி நகர் போலீஸ் ஸ்டேசனில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், போலீசார் கடைக்காரர் செல்வத்தை கைது செய்துள்ளனர்.
கடைக்காரர் செல்வம் கிரிமினல் பின்னணி கொண்டவர் என்றும், அவர் நேற்று கடைக்கு வரும்போது குடிபோதையில் இருந்ததாக ஜெயமோகன் கூறியுள்ளார்.