எழுத்தாளர் கோணங்கி மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுக்கு, உடனடியாக அவர் பதிலளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை தமுஎகச-வின் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா தனது முகநூலில் பகிர்ந்துள்ளார்.
தமிழ் இலக்கிய உலகில் முக்கிய எழுத்தாளராக கருதப்படுபவர் கோணங்கி . கோவில்பட்டியில் பிறந்த இவர் மதினிமார்கள் கதை, கொல்லனின் ஆறு பெண் மக்கள், பொம்மைகள் உடைபடும் நகரம், பட்டுப்பூச்சிகள் உறங்கும் மூன்றாம் சாமம், சலூன் நாற்காலியில் சுழன்றபடி உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகளை எழுதி உள்ளார். இதுபோல பாழி, பிதிரா,த, நீர்வளரி ஆகிய நாவல்களையும் அவர் எழுதி உள்ளார்.
இந்நிலையில் கார்த்திக் ராமசந்திரன் என்பவர் தனது முகநூலில் எழுத்தாளர் கோணங்கி, தன்னிடம் 2013-ம் ஆண்டு தவறாக நடந்துகொண்டார் என்றும் தன்னை போல் பல இளம் நாடகக் கலைஞர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளர் என்று 2 நாட்களுக்கு முன்பாக முகநூலில் பதிவிட்டிருந்தார். மேலும் அவரது சகோதரர் முருகபூபதியும் கோணங்கியின் செயல்பாடுகளை கண்டுகொள்ளாமல், பாலியல் வன்முறைக்கு துணைபோகிறார் என்றும் பதிவிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டு தமிழக இலக்கிய உலகில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சில எழுத்தாளர்கள் கோணங்கியின் குற்றச்சாட்டுக்கு எதிராக கண்டனங்களை பதிவி செய்துள்ளனர்.
எழுத்து உலகில் 15 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் முக்கிய எழுத்தாளரான லஷ்மி சரவணக்குமார் கோணங்கிக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களிடம் அவர் மனிப்பு கேட்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
“இரண்டு நாட்களாக கோணங்கி குறித்து எழுதப்படும் பதிவுகள் அவ்வளவையும் வாசித்துவிட்டேன். முதலில் கடுமையான அதிர்ச்சி ஏற்பட்டது. ஒருவரைத் தொடர்ந்து நிறைய பேர் ஒரேவிதமான குற்றச்சாட்டை வைக்கிறபோது குழப்பமும் வேதனையுமே விஞ்சி நிற்கிறது. அவரோடு பழகிய இத்தனை வருடங்களில் அவரது இந்தப் பகுதியை நான் அறிந்திருக்கவில்லை. இன்று மதியம் எனது மிக நெருக்கமான நண்பனொருவன் அழைத்து பேசியபோது தன்னிடமும் அவர் இதுபோல் நடந்துகொண்டதுண்டு, அதனாலேயே அதன்பிறகு அவரை தனிமையில் சந்திப்பதை தவிர்த்துவிட்டேன் என்றான். ‘மத்தவங்ககிட்ட சொல்லல சரி, இவ்ளோ வருஷமா எங்கிட்ட ஏன் சொல்லல எனக் கேட்டதற்கு இதையெல்லாம் என்னன்னுயா சொல்றது என சிரித்தபடியே உரையாடலை முடித்துக் கொண்டான். இப்போது இந்த நிமிடம் பெரும் கசப்பே மிஞ்சுகிறது. பல்வேறு ஆண்களால் அனேகமுறை பாலியல் அத்துமீறல்களுக்கு உள்ளானவன் என்கிற வகையில் நான் பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கிறேன். கோணங்கிக்கு எனது கண்டனங்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் அவர் தனது வருத்தங்களைத் தெரிவிப்பதோடு மன்னிப்புக் கேட்க வேண்டும், அதுவே அறம்.” என்று பதிவிட்டுள்ளார்.
சினிமா தொடர்பாக புத்தகங்கள் மற்றும் சின்னத் திரை நாடகங்களுக்கு திரைகதை எழுதி வரும் எழுத்தாளர் தீபா ஜானகிராமன் கோணங்கிக்கு எதிராக தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
“இலக்கிய வாசிப்பு மட்டுமே வாழ்க்கையின் அதி உன்னதமானது…இலக்கிய அறிமுகம் அல்லாதவர்கள் தூசுக்கு சமானம் போன்ற கருத்துகளை பரப்பாமல் இருப்பதே நலம். சமீப காலங்களில் இது போன்ற பேச்சுகள் எரிச்சலை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வொருவருக்கும் இருக்கிற 24 மணி நேரமே போதவில்லை. பொருளாதாரத் தேவைகளும் இன்ன பிற நடைமுறைகளையும் எதிர்கொள்வதே இப்போதெல்லாம் சவாலாக இருக்கிறது. இதில் இலக்கிய வாசிப்பு அற்ற ஒருவர் வாழத் தகுதியில்லாதவர் என்பதெல்லாம் பிரசாரமாக வைக்க வேண்டிய அவசியம் என்ன?
எழுத்தாளரை இந்த சமூகமே கொண்டாட வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. எழுத வருகிறது எழுதுகிறார். கௌரவபடுத்துதலுக்கும், மதிப்பதற்கும் கொண்டாடுவதற்கும் வித்தியாசம் உள்ளது. எழுத்தைக் கடந்த இலக்கியச் செயல்பாடுகள் நான்கு சுவருக்குள் கள்ளத்தனமாக அல்லாமல் வெளிப்படையாக இருப்பது ஆரோக்கியமானது.
ஒரு இலக்கிய படைப்பு மாபெரும் பணிகளைத் தன்னளவில் செய்துவிடும். அது வாசகருக்கும் படைப்புக்குமான அந்தரங்க வெளி. இதில் படைப்பாளரை உள்ளுக்குள் இழுத்து எப்போதும் வியந்தோதத் தேவையில்லை.இலக்கியத்தின் பெயரில் கோணங்கி செய்த அவலங்களைக் கண்டிக்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக எழுத்தாளர் கோணங்கி மற்றும் மணல்மகுடியின் பொறுப்பாளர் முருகபூபதி ஆகியோர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பாக அறிக்கை வெளியகி உள்ளது. “ பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக வெளிப்படுத்தியுள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. குற்றம் சாட்டப்பட்டுள்ள கோணங்கிக்கும், மணல்மகுடியின் பொறுப்பாளர் முருகபூபதிக்கும் தமுஎகச தனது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறது. இக்குற்றச்சாட்டுகளுக்கு இவர்களிருவரும் உரிய விளக்கத்தைத் தரவேண்டும்.
பாதிப்பிற்கு ஆளாகியுள்ள கலைஞர்கள் தமக்கு நீதிவேண்டி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தமுஎகச உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.