/indian-express-tamil/media/media_files/2025/03/16/eQugOvWvVIgzcw1DpLPR.jpg)
தமிழ்நாடு அரசின் உ. வே. சா. விருது பெற்ற பெருமைக்குரிய எழுத்தாளர் ரா. நாறும்பூநாதன் வயது (64) தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையை பூர்வீகமாகக் கொண்டவர்.
யானை சொப்பனம், திருநெல்வேலி நீர்- நிலம் -மனிதர்கள், வேணுவன மனிதர்கள், பிரேமாவின் புத்தகங்கள் உள்பட மொத்தம் 12 நூல்களை எழுதியுள்ளார். வங்கியில் பணிபுரிந்து வந்த நாறும்பூநாதன், விருப்ப ஓய்வு பெற்று அரசுப் பணியை துறந்து, அதன்பின் முழுநேர எழுத்தாளராக தம்மை தமிழுக்காக அர்ப்பணித்துக் கொண்டவர். சிறந்த சமூக செயற்பாட்டாளராகவும் விளங்கிய இவர், இளம் படைப்பாளிகளை ஊக்குவித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நாறும்பூநாதன் இன்று (மார்ச் 16) காலை உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். நாறும்பூநாதம் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
மறைந்த எழுத்தாளர் நாறும்பூநாதன் நெல்லை மண்ணின் இலக்கிய முகங்களில் ஒருவரென்று முதல்வர் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகியுமான நாறும்பூநாதன் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன். நாறும்பூநாதன் நெல்லை வட்டாரத்தை மையப்படுத்திய தனது இலக்கியப் படைப்புகளாலும், சமூகச் செயற்பாடுகளாலும் நன்கு அறியப்பட்ட முற்போக்கு இயக்க எழுத்தாளராக விளங்கியவர். நமது அரசு நடத்தும் பொருநை இலக்கியத் திருவிழாவிலும் அவர் மிக முக்கியப் பங்காற்றினார் என்பதை நன்றியோடு இவ்வேளையில் நினைவுகூர்கிறேன்.
நாறும்பூநாதனின் இலக்கியப் பங்களிப்புகள், சமூகச் செயற்பாடுகள், பள்ளி மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தைத் தூண்டுவதற்கான அவரது முன்னெடுப்புகள் ஆகிய தமிழ்ப் பணிகளைப் பாராட்டி 2022-ம் ஆண்டுக்கான உ.வே.சா. விருதினை நமது அரசின் சார்பில் வழங்கியிருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மண்ணின் இலக்கிய முகங்களில் ஒருவரான எழுத்தாளர் நாறும்பூநாதனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், அரசியல், இலக்கியத்துறை நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.