/tamil-ie/media/media_files/uploads/2021/12/Vaathiyaar-Jacob.jpg)
தமிழின் மூத்த எழுத்தாளர் ‘வாத்தியார்’ ஆர்.எஸ்.ஜேக்கப் உடல்நலக் குறைவு காரணமாக நெல்லையில் புதன்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 96.
எழுத்தாளர் ‘வாத்தியார்’ ஜேக்கப்பின் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர், இடதுசாரிகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
எழுத்தாளர் ‘வாத்தியார்’ ஆர்.எஸ்.ஜேக்கப் 130க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். 1949-50களில் பலராலும் அறியப்பட்ட நெல்லைச் சதி வழக்கில் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் வாத்தியார் ஜேக்கப் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கில் இருந்து விடுதலையான பிறகு தொடர்ந்து ஆசிரியர் பணியை மேற்கொண்ட வாத்தியார் ஜேக்கப் தொடர்ந்து கல்விப் பணி ஆற்றினார். விடுதலைக்கு முன்பு இருந்தே இவர் கம்யூனிஸ்ட் கட்சியினருடன் சேர்ந்து இயங்கியவர். நெல்லை சதி வழக்கு தொடர்பாக அவர் எழுதிய நாவல் குறித்து எழுத்தாளர் அ.மார்க்ஸ் 10 ஆண்டுகளுக்கு முன்பு ‘தீராநதி’ இதழில் எழுதியதைத் தொடர்ந்து அவருடைய நூல்கள் கவனம் பெற்றன.
நெல்லையில் வசித்து வந்த எழுத்தாளர் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப், உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை (டிசம்பர் 22) இரவு காலமானார். அவருக்கு வயது 96.
எழுத்தாளர் வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் மறைவுக்கு கம்யூனிஸ்ட் கட்சியினர், இடதுசாரிகள், எழுத்தாளர்கள், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மற்றும் வாசகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மூத்த தலைவர் நல்லக்கண்ணு நெல்லை சதி வழக்கில் நானும் அவரும்தான் (ஆர்.எஸ்.ஜேக்கப்) எஞ்சியிருந்தோம் என்று நெல்லை சதி வழக்கை நினைவுகூர்ந்து புகழஞ்சலி தெரிவித்துள்ளார்.
வாத்தியார் ஆர்.எஸ்.ஜேக்கப் மறைவுக்கு நல்லகண்ணு வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: “நெல்லை சதி வழக்கில் நீண்ட காலம் சிறையிலிருந்த கம்யூனிஸ்ட் ஆர்.எஸ்.ஜேக்கப் வாத்தியார் காலமானார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைமறைவாக இயங்கிய 1948-50களில் நெல்லைச் சதி வழக்கு போடப்பட்டது. எனது பால்ய கால நண்பரும், எழுத்தாளருமான ஜேக்கப் வாத்தியர் அவர்களின் திடீர் மறைவு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. நெல்லைச் சதி வழக்கில் இப்போது இருப்பவர்களில் நானும் அவரும் தான்.
ஒரு கிராமப்புற பள்ளிக்கூடத்தின் உறுதிமிக்க கிறிஸ்துவ ஆன்மிகவாதியாக, ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய ஆர். எஸ்.ஜேக்கப் அவர்கள் மீதும் சதி வழக்கு பாய்ந்தது. கடுமையான சித்திரவதை கொடுமையிலும், கம்யூனிஸ்ட்டுகளை காட்டிக் கொடுக்க மறுத்துவிட்டதோடு, அவர் கைது செய்யப்பட்டு மூன்றாண்டு காலம் சிறையில் வாடினார். காவல்துறையினர் கடுமையாக அவரை தாக்கிவிட்டு கட்சிக்காரர்கள் கொள்கைப் பிடிப்போடு இருந்து காட்டிக் கொடுக்க மறுப்பார்கள், நீ ஏன் காட்டிக் கொடுக்க மறுக்கிறாய் என்று கேட்ட போது, ஜேக்கப் வாத்தியார் அவர்கள், நான் ஜூலியஸ் பூசிக் எழுதிய தூக்குமேடை குறிப்புகள் நூல் படித்தேன். அதனால்தான் இந்த உறுதியைப் பெற்றேன் என்று மறுமொழி கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது தாயாரும், மனைவியும் எப்போதும் கட்சிக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர். நாங்கள் அடிக்கடி அவரது இல்லத்திற்குச் செல்கிறபோது, இன்முகத்தோடு அவர்கள் பழகி இருக்கிறார்கள். வாத்தியார் உபதேசியாகவும் ஆன்மீகவாதியாகவும் நல்ல சமூக சிந்தனை உள்ளவராகவும் சமத்துவ வாதியாகவும் வாழ்ந்தவர். மரண தண்டனையையே சந்திக்க நேர்ந்தபோதிலும் சிறிதும் மனம் கலங்காமல் தன்னுடைய நிலையில் உறுதியாக நின்று ஒரு கிறிஸ்துவ கம்யூனிஸ்டாக இறுதி வரை வாழ்ந்தவர் ஆசிரியர் ஆர் எஸ் ஜேக்கப்..
ஒரு கரிசல் காட்டு கிராமத்தின் அவல நிலையை மாற்றுவதற்காக எடுத்த நடவடிக்கைகளை 'வாத்தியார்' என்ற நாவலில் அழகுற விளக்கியுள்ளார். நெல்லைச் சதி வழக்கு சம்பவங்களை நூல்களாக அவர் எழுதியுள்ளார். மூன்றாண்டுகள் சிறைவாசத்தை 'மரண வாயிலில்' என்ற நாவலில் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ் இலக்கிய உலகம் ஒரு மிகப்பெரிய எழுத்தாளுமையை இழந்துவிட்டது.
தோழர் ப.மாணிக்கம், பேராசிரியர் நா.வானாமாமலை ஆகியோரோடு மிகுந்த நெருக்கத்தோடு இருந்தவர். அவரது இழப்பால் வாடும் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
எழுத்தாளர் ‘வாத்தியார்’ ஆர்.எஸ்.ஜேக்கப் மறைவுக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் (பொறுப்பு) கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட்டுள்ள அஞ்சலி செய்தியில் கூறியிருப்பதாவது: “தமிழின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராகிய ‘வாத்தியார்’ ஜேக்கப் நெல்லையில் நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார்.
1949–50ம் ஆண்டுகளில் கம்யூனிஸ்ட்கள் மீது நெல்லை சதிவழக்கு புனையப்பட்டது. அவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 93 பேரில் தோழர் ஆர்.நல்லகண்ணுவும் ஜேக்கப்பும் மட்டுமே உயிரோடு எஞ்சியிருந்த நிலையில், ஜேக்கப் 21.12.21 அன்று காலமாகியுள்ளார். அவருக்கு வயது 96.
விசாரணைக் கைதியாக அழைத்து செல்லப்பட்டு போலிஸ் காவலில் கடும் சித்திரவதை செய்யப்பட்ட ஜேக்கப், சுமார் மூன்றரை வருட காலத்திற்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டார். அவர் எழுதிய டைரிக் குறிப்புகளே அவரைக் காட்டிக்கொடுத்தன. பின்னர், அதுவே அவர் விடுதலை செய்யப்படுவதற்கும் காரணமாய் அமைந்தன. இதை மையமாக வைத்து ‘வாத்தியார்’ என்ற நாவலை எழுதினார். அது பல பதிப்புகள் கண்டது.
தொடர்ந்து, ‘மரண வாயிலிலே’ என்றொரு நூலை எழுதினார். பனையண்ணன் என்பது இன்னொரு நாவல். இவர் எழுதிய நூல்களின் பட்டியல் சுமார் 130 க்கும் மேல்.
தனது பத்தொன்பதாவது வயதில், தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சி அருகில் உள்ள நைனார்புரம் என்ற கிராமத்தின் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார். நான்கு, ஐந்து மாணவர்களே அப்போது பயின்றனர். அவர்களும் அந்த ஊரின் பண்ணையாரின் குடும்பத்தை சேர்ந்தவர்களே.
அந்த ஊரில் உள்ள ஒடுக்கப்பட்ட சாதிகளின் குழந்தைகள், பண்ணையார் வீட்டு மாடுகளை குளிப்பாட்டுவதிலும், தொழுவங்களை பெருக்கி சுத்தம் செய்வதிலும் ஈடுபட்டிருந்ததைக் கண்டு கொதித்துப்போய், அவர்களை பள்ளிக்கு அழைத்து வந்து பாடம் கற்பித்தார். பள்ளியில் 65 மாணவ,மாணவியரை சேர்த்து பண்ணையாரின் கோபத்திற்காளானார். பண்ணையாரின் அடியாட்களின் தாக்குதலுக்குள்ளானார்.
அந்த நேரம் இடதுசாரி கொள்கைகளில் ஈடுபாடு கொண்டு, பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டார். கம்யூனிஸ்ட் இயக்கம் தடை செய்யப்பட்டபோது, தலைமறைவாகி இருந்த தோழர் பாலதண்டாயுதம் உள்ளிட்ட தோழர்களுக்கு தேவாலயத்தில் அடைக்கலம் கொடுத்தார். அவர்களுக்கு உணவு வழங்கியும், இரவு தங்கிச் செல்லவும் இடம் கொடுத்ததுதான் இவர் மீதான குற்றச்சாட்டு.
விடுதலைக்குப்பின் மீண்டும் ஆசிரியர் பணியைத் தொடர்ந்தார். பாளையங்கோட்டையில் இருந்து வெளிவரும் "நற்போதகம்" என்ற மாதாந்திர இதழில் 12 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். இந்த இதழ் தொடர்ந்து 165 ஆண்டுகளாக இன்றும் வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லையில் பணியாற்றிய கிறிஸ்தவ மிஷனரிகள் கால்டுவெல், ரேனியஸ் அடிகளார், சாப்டர், ஜான் டக்கர் போன்றவர்களின் கல்விப்பணிகள் குறித்தும், பெண்களுக்கென்று தனியாக கல்வி நிறுவனத்தை உருவாக்கிய சாராள் டக்கர் பற்றியும் பல்வேறு கட்டுரைகளை எழுதியவர் வாத்தியார் ஜேக்கப்.
நெல்லை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களுக்கு சென்று, ஊர் வரலாற்றைச் சேகரித்து, "ஊரும் பேரும்" என்று மூன்று தொகுதிகளாக வெளியிட்டார் இவர். வாழ்நாளின் கடைசி வரை, டைரி எழுதும் பழக்கத்தை மேற்கொண்டிருந்த எழுத்தாளர் வாத்தியார் ஜேக்கப் அவர்களின் மறைவிற்கு, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் தனது ஆழ்ந்த அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.