தி.மு.க தலைவர்கள் பற்றி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துப் பதிவிட்ட நபரை சென்னை பெருநகர காவல்துறையின் சைபர் கிரைம் போலீசார் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது செய்தனர்.
ஆகஸ்ட் 25-ம் தேதி 'எக்ஸ்' (ட்விட்டர்) தளத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க தூத்துக்குடி எம்.பி கே.கனிமொழி ஆகியோர் பற்றி அவதூறு கருத்துகள் மற்றும் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் வெளியிட்டப்பட்டதாக சென்னை ராஜா அண்ணாமலை புரத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை காவல்துறையில் புகார் அளித்ததன் பேரில் ஆகஸ்ட் 27-ம் தேதி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
புகாரைத் தொடர்ந்து, எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்து பதிவிட்ட நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்தனர்.
"ஐ.பி பதிவுகளை ஆய்வு செய்ததில், அதில் இணைக்கப்பட்ட மொபைல் எண் கண்டுபிடிக்கப்பட்டது மற்றும் அதை பயன்படுத்துபவர் எம். வேலு என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து சிறப்புக் குழு அமைக்கப்பட்டு அக்டோபர் 17-ம் தேதி வேலு கைது செய்யப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவர் ட்விட்டரில் (எக்ஸ்) அவதூறான கருத்துகளை பதிவிட்டதாக குற்றத்தை ஒப்புக்கொண்டார்” என்று காவல்துறையினர் கூறினர்.
இதைத் தொடர்ந்து வேலு (54) பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய போலீஸார், அவரை செவ்வாய்க் கிழமை மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், பொதுமக்கள் சமூக வலைதளங்களில் உண்மைக்கு புறம்பான தவறான செய்திகளை, அதன் நம்பகத்தன்மையை சரி பார்க்காமல் பதிவிடவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று கேட்டுக் கொண்டது. மேலும் சைபர் கிரைம் குறித்து http://www.cybercrime.gov.in - புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தியது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“