/indian-express-tamil/media/media_files/2025/05/28/86NZPy97qSCGZc2SJSM3.jpg)
மதுரையில் ’Y’ வடிவ மேம்பாலம் திறப்பு; மக்கள் வரவேற்பு!
மதுரையில் பழங்காநத்தம் - டி.வி.எஸ். நகர் - ஜெய்ஹிந்த்புரம் பகுதிகளை இணைக்க மேம்பாலம் கட்டும் பணிகள் 2009-ல் துவங்கியது. தமிழக நெடுஞ்சாலைத் துறையின் நபார்டு மற்றும் கிராம சாலைகள் பிரிவின்கீழ் இப்பணிகளுக்காக சுமார் ரூ.33 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதன்படி பழங்நாத்தம் பழைய பேருந்து நிறுத்தத்திலிருந்து டி.வி.எஸ். நகர், ஜெய்ஹிந்த்புரம் இடையே ஆயிரத்து 82 மீட்டர் நீளம், டி.வி.எஸ் நகர் மற்றும் ஜெய்ஹிந்த்புரத்தில் தலா 8.50 மீட்டர் அகலம், பழங்காநத்தத்தில் 12 மீட்டர் அகலத்தில் ‘ஓய்' வடிவில், பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றன.
ஆங்கில எழுத்தின் "Y' வடிவில் 21 தூண்களுடன், ரூ.33 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி நிதியில் கட்டப்பட்டு கடந்த 2018-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. நில ஆர்ஜிதம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் மேம்பால பணி அறை குறையாக கைவிடப்பட்டன.
உயர் அழுத்த மின்வயர்கள் சென்றதால், மின் கம்பங்களை சாலையோரம் மாற்றியமைக்க தாமதம் ஏற்பட்டது. இதனால் இப்பகுதியில் பாலப் பணிகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஆமை வேகத்தில் நடந்தன. எனினும், கடந்த ஆண்டு மீண்டும் பணிகள் துவங்கப்பட்டு தற்போது பாலம் நிறைவுபெற்றுள்ளது. இதன் மொத்த நீளம் 1 கி.மீ அகலம் 7.50மீ. பாலத்தின் கீழ் இருபுறமும் 5மீ அகலத்தில் சர்வீஸ் ரோடுகளும், பழங்காநத்தம் சிக்னல் பகுதியில் பாலத்தின் உயரம் 5.50 மீ உயரத்திலும், ரயில்வே தண்டவாள பகுதியில் 9மீ உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளன. ரயில்வே தண்டவாள பகுதியில் இலகுரக வாகனங்கள் சென்று வர எதுவாக சுரங்கப்பாதை ஒன்றும் ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது.
/indian-express-tamil/media/post_attachments/tamil/uploads/2022/10/Madurai-6-2-228142.jpg)
ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் முடங்கிய பணிகள் கடந்த ஆண்டு மீண்டும் தொடங்கி தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன. இந்நிலையில் இப்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. மதுரை பழங்காநத்தம் - டிவிஎஸ் நகர் சாலையில் திருப்பரங்குன்றம் சாலைக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள இப்பாலம், டி.வி.எஸ். நகரில் உள்ள தனியார் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள், ஜெய்ஹிந்த்புரம், அவனியாபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். புதிய பாலம் திறக்கப்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் உற்சாகமாக சென்று வருகின்றனர்.
செய்தி: சோ.மீனாட்சி சுந்தரம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.