Advertisment

யாதவர்களுக்கு 5% உள் இடஒதுக்கீடு வேண்டும்: திருச்சி மாநாட்டில் தீர்மானம்

திருச்சியில் நடந்த யாதவர் எழுச்சி மாநாட்டில் 5% உள் இடஒதுக்கீடு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Trichy

Trichy

தமிழ்நாடு யாதவ மகாசபை சார்பில் யாதவர் எழுச்சி மாநாடு திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் அருகே நேற்று இரவு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் டாக்டர் நாசே.ஜெ. ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

Advertisment

சிறப்பு அழைப்பாளர்களாக உத்தரப் பிரதேச எம்.பி. ஷியாம்சிங் யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உத்தரகாண்ட் மாநில பொறுப்பாளர் தேவேந்தர் யாதவ், உத்தரப் பிரதேச மாநில முன்னாள் எம்.பி. சுக்ராம்சிங் யாதவ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தந்தையில்லாத யாதவ மாணவ-மாணவிகளை தத்தெடுக்கும் திட்டத்தை அகில இந்திய யாதவ மகாசபை முன்னாள் தலைவர் உதய் பிரதாப்சிங் யாதவ் தொடங்கி வைத்து பேசினார். மாநாட்டில் தமிழ்நாடு யாதவ மகாசபை தலைவர் டாக்டர் நாசே.ராமச்சந்திரன் பேசுகையில், யாதவ இனத்துக்கு மிகப்பெரிய வரலாறு, பாரம்பரியம் உள்ளது. எப்போதெல்லாம் பிரச்சினை வருகிறதோ, அதை சந்தர்ப்பமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்பார்கள்.

நீங்கள் அவ்வாறு நல்ல சந்தர்ப்பமாக மாற்றி இருக்கிறீர்கள். இந்த மாநாட்டின் நோக்கம் கல்வி, வேலை வாய்ப்பில் முன்னுரிமை வேண்டும். அரசியல் கட்சிகள் யாதவர்களுக்கு அதிகாரத்தில் பங்களிக்க வேண்டும். ஏதாவது ஒரு அரசியல் கட்சி யாதவரை ஒதுக்கிவிட்டு அரசியல் செய்ய நினைத்தால் அந்த கட்சியை தமிழ்நாடு யாதவ மகாசபையும், யாதவரும் ஒட்டுமொத்தமாக ஒதுக்கி தள்ள வேண்டும்.

அதற்கு கிராமங்கள் தோறும், நகரங்களிலும் யாதவ மகாசபையை பலப்படுத்த வேண்டும். யாராவது ஓட்டு கேட்டு வந்தால் யாதவ மகாசபையிடம் கேட்டுவிட்டு வாருங்கள் என்று சொல்லுங்கள். ஆமாம், நாங்கள் ஆடு, மாடு மேய்க்கிற இனம் தான். அதை நாங்கள் சட்டைக்காலரை தூக்கி பெருமையாக சொல்வோம். ஆனால் ஆடு, மாடுபோல வெட்டுப்பட நாங்கள் தயாராக இல்லை. இன்னொருமுறை எங்களது உடன்பிறப்புகளை யாராவது ஏதாவது செய்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து யாதவர்களும் வீதிக்கு வந்து போராடுவோம். சிறைக்கு செல்லவும் தயங்க மாட்டோம். எந்த அரசாக இருந்தாலும் எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை.

publive-image

நாங்கள் கல்வியில் பின்தங்கியவர்கள் இல்லை. நிலவுக்கு சந்திரயான் அனுப்பிய பெண்களில் ஒருவர் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர். நாங்கள் ஆடு மேய்ப்பவர்களாகவும் இருப்போம். சந்திரனுக்கு விண்கலம் அனுப்பும் விஞ்ஞானியாகவும் இருப்போம் என பேசினார்.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

சாதிவாரி கணக்கெடுப்பு- தமிழ்நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும். யாதவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும். அதுவரை யாதவர்களுக்கு 5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் நலவாரியத்தை அமைத்து கால்நடை வளர்ப்போருக்கு பாதுகாப்பும், பொருளாதார மறுமலர்ச்சியும் ஏற்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நலவாரிய தலைவராக ஒரு யாதவரை நியமனம் செய்ய வேண்டும்.

இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனுக்கு அவர் வாழ்ந்த மண்ணில் புதியதோர் கோட்டை அமைத்து அதை சுற்றுலாத்தலமாக அமைத்திடவும், பள்ளி பாடப்புத்தகங்களில் அவருடைய வரலாற்றை சேர்த்திடவும், வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுகளுக்கு மானியம், இதர சலுகைகளும் வழங்கிட வேண்டும்.

தேர்தலில் போட்டியிட வாய்ப்பு- வருகிற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அனைத்து அரசியல் கட்சிகளும் யாதவ மக்கள் மற்றும் யாதவர்களின் ஓட்டு எண்ணிக்கை அடிப்படையில், யாதவ இனத்தை சேர்ந்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்க வேண்டும். அமைச்சரவைகளிலும் அதிக அளவில் அமைச்சர் பதவிகள் யாதவர்களுக்கு அளித்திட வேண்டும். அப்படி வாய்ப்பு அளிக்காவிட்டால் தமிழ்நாட்டின் அனைத்து தொகுதியிலும் யாதவ மகாசபை சார்பில் போட்டியிடுவார்கள் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் அருண் சுபாஷ் சந்திர யாதவ், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, முன்னாள் எம்.எல்.ஏ. மலேசியா பாண்டியன், மதுரை ஓட்டல் பார்க் பிளாசா நிர்வாக இயக்குநர் கே.பி.நவநீதகிருஷ்ணன், யாதவ மகாசபை மாநில இளைஞர் அணி பொதுச்செயலாளர் பொட்டல் எஸ்.துரை, மாநாட்டு அமைப்பாளர்கள் ஸ்ரீதர், தமிழ்செல்வம், முத்தையா, தொழிலதிபர் ஜெயகர்ணா, ராக்போர்ட் டைம்ஸ் முதன்மை ஆசிரியர் லட்சுமிநாராயணன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், யாதவ மகாசபை நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, மாநில பொதுச் செயலாளர் வேலுமனோகரன் வரவேற்றார். முடிவில் மாநில பொருளாளர் எத்திராஜ் நன்றி கூறினார்.

செய்தி: க. சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Trichy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment