Yashwant Sinha meets DMK ally says BJP won’t do anything in Tamilnadu: நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாம் உள்ளோம், மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சி என எதிர்கட்சிகளின் குடியரசு தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளார்.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் முடியவுள்ள நிலையில், ஜூலை 18 ஆம் தேதி குடியரசு தலைவருக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக திரவுபதி முர்மு-ஐ பா.ஜ.க அறிவித்துள்ளது. அதேநேரம் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா களமிறங்குகிறார்.
இதையும் படியுங்கள்: ஜெயலலிதா வீட்டை கட்சி சார்பில் வாங்க இ.பி.எஸ் உடன் படாதது ஏன்? ஓ.பி.எஸ் தரப்பு புது புகார்
இதனையடுத்து, யஷ்வந்த் சின்ஹா நாடு முழுவதும் பல்வேறு கட்சி தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறார். அந்த வகையில், சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில், மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து யஷ்வந்த் சின்ஹா ஆதரவு கோரினார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய யஷ்வந்த் சின்ஹா, காங்கிரஸ், ம.தி.மு.க, சி.பி.எம், சி.பி.ஐ, வி.சி.க, மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, கொங்குநாடு தேசிய கட்சி உள்ளிட்ட தி.மு.க தோழமைக் கட்சிகளின் ஆதரவையும் கோரினார். இந்தச் சந்திப்பின்போது தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.
பின்னர் பேசிய யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக நான் களமிறங்குகிறேன். நான் வேட்புமனு தாக்கல் செய்த மறுநாளில் இருந்து, பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று பல கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரி வருகிறேன். மற்ற மாநிலங்களுக்கும் சென்று மற்ற கட்சித் தலைவர்களையும் சந்தித்து ஆதரவு கோர முடிவு செய்துள்ளேன்.
இந்தக் குடியரசு தலைவர் தேர்தல் முக்கியமானது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலையில் நாம் உள்ளோம். மகாராஷ்டிர மாநிலத்தின் தற்போதைய அரசியல் சூழ்நிலையே அதற்கு சாட்சி. மகாராஷ்டிராவில் புதிதாக பதவியேற்கும் அரசு நீண்ட நாள் நீடிக்காது என்பதால் பா.ஜ.க.,வைச் சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்கவில்லை.
பல மாநிலங்களில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் பா.ஜ.க.,வுக்கு தமிழகத்தில் அது சாத்தியமாகவில்லை. தமிழகத்தில் வலுவான ஆட்சி உள்ளது. தமிழகத்தில் பா.ஜ.க.,வால் எதுவும் செய்ய முடியவில்லை.
ஆளுநர்களின் செயல்பாடு அரசியல் அமைப்பு சட்டப்படி இருக்க வேண்டும். ஆனால் தற்போது அப்படி இல்லை. அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஒவ்வொரு பிரிவும் உடைக்கப்படுகிறது.
மத்திய அரசின் அத்துமீறல்களுக்கு எதிராக கடந்த காலங்களிலும் குரல் கொடுத்துள்ளேன். வரும் காலத்திலும் அவர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக எனது போராட்டம் தொடரும், என்று யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil