தமிழ்நாட்டில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. பல இடங்களில் 105 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகி வந்தன. குறிப்பாக ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர் பகுதியில் அதிகபட்சமாக 110 டிகிரி வரை வெப்ப நிலை பதிவானது. இதனால் மக்கள் வீடுகளுக்கு உள்ளே முடங்கினர். மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் கடந்த 10 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. கோடை மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், தமிழகத்தில் 5 நாட்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கையை வானிலை மையம் விடுத்துள்ளது.
தமிழகத்தின் தென் மாவட்டங்களில் 5 நாள்களுக்கு சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
அதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. இதே நிலை 14ம் தேதி வரை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
வெப்பநிலையை பொருத்தவரையில் 14-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒருசில இடங்களில் 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் இயல்பைவிட அதிகமாகவும் இருக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“