நேற்று ஏர்செல்... இன்று ஏர்டெல்! சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் சாலை மறியல்

சென்னை கீழ்பாகத்தில் உள்ள ஏர்டெல் அலுவலகத்துக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டனர். தொலைப்பேசி எண்களை வேறு ஒரு நெட் ஒர்க்கிற்கு மாற்றித் தருமாறு கேட்டனர்.

தமிழகத்தில் ஏர்செல்லைத் தொடர்ந்து ஏர்டெல் சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வாடிக்கையாளர்கள் கோபமடைந்து சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜியோவின் வரவால் தொலைதொடர்பு நிறுவனங்கள் பல்வேறு பிரச்னைகளை சந்திக்க ஆரம்பித்துள்ளன. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதிதுபுதிதாக திட்டங்களை அறிவித்து வருகிறது. இதனால் தொலைபேசி வாடிக்கையாளர்கள் அவர்கள் பக்கம் செல்கின்றனர்.

தொலைப்பேசி இணைப்புகள் கொடுக்க ஆரம்பிக்கப்பட்ட போது உருவான ஏர்செல் நிறுவனம் தமிழகத்தில் கோலாச்சி வந்தது. ஆனால் ஜியோவின் வருகைக்குப் பின்னர் அதன் வருவாய் பாதிக்கப்பட்டது. பல இடங்களில் செல்போன் கோபுரங்களுக்கு வாடகைக் கூட கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்நிலையில் திடீரென ஏர்செல் நிறுவனம் திவாலானதாக அறிவிக்கக் கோரியது. இதையடுத்து அதன் வாடிக்கையாளர்கள் வேறு நெட் ஒர்கை நாட வேண்டிய சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் திடீரென ஏர்டெல் நெட் ஒர்க்கிலும் கடந்த சில நாட்களாக பிரச்னை ஏற்பட ஆரம்பித்துள்ளது. கடந்த சில நாட்களாக ஏர்டெல் நிறுவனம் சிம் வைத்திருப்பவர்கள் போன் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

இதனிடையே இன்று சென்னை கீழ்பாகத்தில் உள்ள ஏர்டெல் அலுவலகத்துக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் திரண்டனர். தங்களது தொலைப்பேசி எண்களை வேறு ஒரு நெட் ஒர்க்கிற்கு மாற்றித் தருமாறு கேட்டனர். ஆனால் சர்வர் பிரச்னையால் மாற்ற முடியவில்லை என்ற அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வாடிக்கையாளர்களுக்கும், ஏர்டெல் ஊழியர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாடிக்கையாளர்கள் நூற்றுக் கணக்கானோர், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக போலீசார் வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

ஜியோவுக்கு இணையாக பல்வேறு திட்டங்களை அறிவித்து வரும் ஏர்டெல் நிறுவன நெட் ஒர்க்கில் பிரச்னை என்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close