Advertisment

விமான நிலையத்தில் மீண்டும் இந்தி திணிப்பு; நேற்று கனிமொழி... இன்று ஷர்மிளா; அனல் பறந்த ‘இந்தி தெரியாது போடா’

கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண், இந்தி தெரியாது என்று கூறியதற்காக மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம், மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளது.

author-image
WebDesk
New Update
airport goa chennai

விமான நிலையத்தில் மீண்டும் இந்தி திணிப்பு; நேற்று கனிமொழி... இன்று ஷர்மிளா; அனல் பறந்த ‘இந்தி தெரியாது போடா’

கோவா விமான நிலையத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண், இந்தி தெரியாது என்று கூறியதற்காக மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரரால் மிரட்டப்பட்ட சம்பவம், மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியுள்ளது. 

Advertisment

3 ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை விமான நிலையத்தில், தி.மு.க எம்.பி கனிமொழி இந்தி தெரியாது என்று கூறியதற்காக மிரட்டப்பட்டதாகத் தெரிவித்தார். இதையடுத்து, தமிழ்நாடே சமூக ஊடகங்களில் ‘இந்தி தெரியாது போடா’ என்று கொந்தளித்தது. 

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் என்பது  85 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றைக் கொண்டது. மதராஸ் மாகாணத்தில் 1938-ம் ஆண்டு முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. இந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்று சிறை சென்ற நடராசன் முதலில் உயிரிழந்தார். அடுத்து தாளமுத்து சிறையில் உயிரிழந்தார். இவர்களே இந்தி எதிர்ப்பின் முதல் மொழிப்போர் தியாகிகள்.

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டம், 4 கட்டங்களாக நடந்துள்ளது. 138-ல் தொடங்கிய முதல் இந்தி எதிர்ப்பு போராட்டம், 1940-களிலும் பின்னர், 1950-களிலும் பின்னர், 1963 - 1965 வரை நடந்த மிகப் பெரிய இந்தி எதிர்ப்பு போராட்டம். கடைசியாக நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியை தூக்கி எறிந்தது. அதற்கு பிறகு காங்கிரஸ் கட்சியால் முக்கால் நூற்றாண்டுக்குப் பிறகும், தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. 

தமிழகத்தில் 1963 - 1965 வரை நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மாணவர்களும் தி.மு.க-வினரும் முன்னெடுத்தனர். அப்போது போராட்டங்களில் பல இந்தி எதிர்ப்பு முழக்கங்கள் எழுந்தன. 

‘இந்திக்குத் தமிழென்ன தாழ்வு - இதை எதிர்க்காத தமிழர்க்கு இனியென்ன வாழ்வு’

‘அத்தை மகள் தமிழ் இருக்க, ஆசை நாயகி ஆங்கிலம் இருக்க, ஊர் வேசி இந்தி எதற்கு’

"இந்திக்கு இங்கு ஆதிக்கமா? எல்லோரும் வாருங்கள் நாட்டினரே! செந்தமிழுக்கு ஒரு தீங்கு வந்தபின்னும் இந்த தேகம் இருந்தும் ஒரு லாபமுண்டோ?" 

போன்ற முழக்கங்கள் எல்லாம் அப்போது பிரபலமாக முன்வைக்கப்பட்டது. 

இப்படி தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பது வரலாறாக உள்ள நிலையில், அவ்வப்போது மத்தியில் ஆளும் அரசு அதை உரசிப் பார்த்து சூட்டைக் கிளப்பிவிடுகிறது.

அந்த வகையில்,  தமிழகத்தைச் சேர்ந்த ஷர்மிளா என்ற பெண் குடும்பத்துடன் கோவாவில் சுற்றுலாவை முடித்துவிட்டு திரும்பும்போது, கோவா விமான நிலையத்தில் சோதனை நடைபெறும் பகுதியில், அவரிடம் மத்திய தொழிற்பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர் ஒருவர் இந்தியில் கேள்விக்கு கேட்டதற்கு தனக்கு இந்தி தெரியாது என கூறி இருக்கிறார். அதற்கு அந்த சி.ஐ.எஸ்.எஃப் வீரர், தமிழ்நாடு இந்தியாவில்தானே இருக்கிறது- இந்தியாவில் உள்ள அனைவரும் இந்தியைக் கற்றாக வேண்டும் என மிரட்டியிருக்கிறார். இந்த சம்பவம் குறித்து அவர் அங்கேயே சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரியிடம் புகார் தெரிவித்திருக்கிறார். இந்தி தெரியாது என்று கூறியதற்காக சி.ஐ.எஸ்.எஃப் வீரரால் மிரட்டப்பட்டது குறித்து ஷர்மிளா ஊடகங்களில் கூறியதை அடுத்து,  ‘இந்தி தெரியாது போடா’ என்று மீண்டும் இந்தி திணிப்புக்கு எதிரான பதிவுகளால்  சமூக ஊடகங்கள் அனல் பறந்தன. 

தமிழ்நாட்டுப் பெண் ஷர்மிளா இந்தி தெரியாது என்று கூறியதற்காக, சி.ஐ.எஸ்.எஃப் வீரரால் மிரட்டப்பட்ட சம்பவத்துக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இதேபோல, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 2020-ம் ஆண்டு கனிமொழிக்கு நடந்தது. சென்னை விமான நிலையத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் தி.மு.க எம்.பி கனிமொழி-யிடம் இந்தி தெரியாது என்பதற்காக நடந்த பிரச்னை, அப்போது, இந்தி திணிப்புக்கு எதிராக  பெரும் கொந்தளிப்பும் எதிர்ப்பும் எழுந்தது. மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் போன்றவர்களும் கனிமொழிக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை தாங்களும் எதிர்கொண்டதாக தெரிவித்தனர். 

அப்போது, சமூக ஊடகங்களில், பிரபலங்கள் பலரும் ‘இந்தி தெரியாது போடா’ என்ற டீ சர்ட் அணிந்து பதிவிட்டனர். இதனால், சமூக ஊடகங்களில் பலநாள் ‘#இந்தி தெரியாது போடா’ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது. இந்தி திணிப்பு எதிர்ப்பு முழக்கத்தில், சமூக ஊடகங்களில் தமிழ் பேசும் இளைஞர்களுடன் இந்தி ஆதிக்கத்தை எதிர்க்கும் பிற மாநில இளைஞர்களும் இணைந்ததால்,  அப்போது ‘இந்தி தெரியாது போடா’ முழக்கம் என்ற சமூக ஊடகங்களில் அனல் பறந்தது. 

அதற்கு பிறகு, கோவா விமான நிலையத்தில், இந்தி தெரியாது என்றதற்காக, சி.ஐ.எஸ்.எஃப் வீரரால், தமிழ்ப் பெண் மிரட்டப்பட்ட சம்பவத்தால், மீண்டும் சமூக வலைதளங்களில் இந்தி திணிப்புக்கு எதிரான பதிவுகள் ட்ரெண்டிங் ஆனது. அன்று சென்னை விமான நிலையத்தில் கனிமொழிக்கு சி.ஐ.எஸ்.எஃப் விரர்களால் நேர்ந்த இந்தி திணிப்பு நிகழ்வு, இன்று கோவா விமான நிலையத்தில் ஷர்மிளாவுக்கு நடந்துள்ளது. விமான நிலையங்கள் மட்டுமே மாறி இருக்கிறது. இந்தி திணிப்பு அப்படியே இருக்கிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Hindi Impositon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment