திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் இருக்கும் விவசாயிகளை நேரில் சந்திக்க சுயராஜ்ய கட்சியின் தலைவர் யோகேந்திர யாதவ் தமிழகம் வந்தார்.
யாரிந்த யோகேந்திர யாதவ் ?
யோகேந்திர யாதவ் சுயராஜ் இயக்கத்தின் தலைவராவர். இதற்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய் பொறுப்பில் இருந்தவர். அரசியல் கல்வி கற்ற இவர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் பேராசிரியராக பணியாற்றிவந்தார்.
தேசிய பல்கலைக்கழக குழு மானியத்தின் உறுப்பினராக பணியாற்றிய இவர் பல்வேறு தொலைக்காட்சிகளில் அரசு நடவடிக்கைகள் தொடர்பாக கமாண்ட்ரி செய்யும் பணியிலும் ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பு வகித்ததன் விளைவாக யூஜிசியில் இருந்து நீக்கப்பட்டார். ஆம் ஆத்மியில் இருந்து விலகி பின்னர் சுயராஜ் இயத்தினை தோற்றுவித்தார் யோகேந்திர யாதவ்.
யோகேந்திர யாதவ் கைது
எட்டுவழிச் சாலைக்கு விவசாய நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக எதிர்ப்பு தெரிவித்து வரும் அந்த விவசாயிகளுக்கு ஆதரவு அளிப்பதற்காக அவர் வந்துள்ளார்.அத்திப்பாடி பகுதியில் இருக்கும் விவசாயிகளை பார்த்துவிட்டு பின்னர் செங்கம் செல்லும் வழியில் அவர் பயணம் செய்த வாகனத்தை நிறுத்தி அவரை கைது செய்திருக்கிறது காவல்துறை. பின்பு யோகேந்திர யாதவ் மற்றும் அவருடன் பயணித்தவர்களை தமிழக காவல் துறையினர் தாக்கியதாகவும் மிகவும் மோசமாக தங்களிடம் நடந்து கொண்டதாகவும் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமியிடம் காவல்துறையின் கட்டுப்பாடு ஏதாவது இப்பகுதியில் இருக்கிறதா என்று ஆலோசனை செய்த பின்பே நாங்கள் இங்கு வந்தோம். இருந்தும் நாங்கள் கைது செய்யப்பட்டிருக்கிறோம் என்று அவர் வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார்.
போலீஸ் ராஜ்யமா என கேள்வி கேட்கும் யோகேந்திர யாதவ்
கைது செய்யப்பட்ட யோகேந்திர யாதவ் மற்றும் அவரை சந்தித்து பேசிய விவசாயிகள், அவரை சந்திக்க காத்திருந்த விவசாயிகள் என அனைவரையும் கல்யாண மண்டபத்தில் வைத்திருக்கிறது காவல் துறை. இதுவரை இந்த கைது நடவடிக்கை காரணமாக எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் எங்களுக்கு கிடைக்கவில்லை என ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் யோகேந்திர யாதவ்.
தமிழக கட்சிகள் கண்டனம்:
யோகேந்திர யாதவ் கைதுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்து பதிவு செய்துள்ளனர். மேலும் திமுக கட்சித் தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ட்விட்டர் பகுதியில் கருத்து பதிவு செய்துள்ளார்.ஜனநாயக ஆட்சியில் எதிர்ப்பு தெரிவிப்பதற்கும் போராட்டம் நடத்துவதற்கும் தடை விதிக்கும் தமிழக அரசு இதற்கு தக்கவிலையை தரும் என ட்விட்டரில் கருத்து பதிவு செய்திருக்கிறார்.
அதே போல் யோகேந்திர யாதவ் கைதுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாசன் தன்னுடைய கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்.